குளுவன்களுக்கு கயிறு எறியும் பொறுப்பு தராக்கியிடம்!கூட்டமைப்பின் உருவாக்கம் எப்படி ?

கூட்டமைப்பின் உருவாக்கம் எப்படி நிகழ்ந்தது (2)

(தயாளன்) 

புலம்பெயர்  தமிழர்களிடையே ஒரு கோளாறு உண்டு. ஒரு பத்திரிகையாளன் எவ்வளவு நாகரிகமில்லாமல், உண்மைக்குப் புறம்பாக கற்பனையில் எதை எழுதினாலும் பரவாயில்லை. கருணாவையும் ,பிள்ளையானையும் தாக்கினால் போதும். அவரைத் தேசியவாதி என்று உச்சச்கொம்பில் ஏற்றிவிடுவார்கள் .வீடு தேடிப்போய்ப் பாராட்டவும் செய்வார்கள். அவர்களுக்கு பாராட்டு விழா நடந்தால் பாதுகாப்பளிக்கவும் செய்வார்கள். இவர்கள் தமது எழுத்தினூடே போராட்டத்திற்கு, , தேசியத்துக்கு எதிரான கருத்துக்களை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் ஏற்றுவதைக் கண்டுகொள்ளமாட்டார்கள். குள்ளத்தனமாக எழுதுவதை கண்டு பிடிக்க தெரியாது என்பதே உண்மை.
தட்டிக் கேட்க ஆளில்லவிட்டால் .........?
பத்திரிகைச் சுதந்திரம் என்ற கவசத்தில் இவர்கள் இவ்வளவு கோளாறுகளையும் செய்வதற்கேதுவான வழிகளைத் திறந்தது புலம்பெயர் தேசத்தில் பொறுப்பாக உள்ளவர்களே. அரசியல் அடைக்கலம் பெற்று வந்த இவர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து தமது ஊடகங்களில் பெருந்தொகையான பணத்தைக் கொடுத்து எழுதவிடுவார்கள். பணம் மித மிஞ்சிய நிலையில் இவர்கள் "பிரபாகரனுக்குத் தேசியத் தலைவர் என்ற பட்டத்தைக் கொடுத்தது யார்?“ எனப் பல வருடங்களாகப் போராளிகளாக இருந்தவர்களைப் பார்த்து கேள்வி கேட்பார்கள். எதையும் பற்றிக் கவலைப்படாமல் பிள்ளையான் வேடன் - கருணா கோவணத்துடன் திரிந்தவர், என்று எழுதுவதுதான் தேசியப்பற்று எனத் தவறாக விளங்கியமையே காரணம்.
மேலும் சுதுமலையில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தைத் தான் ஏற்றுக்கொண்டதாக தலைவர் கூறவில்லை. மாறாக  "சிங்கள இனவாத பூதம் இந்த ஒப்பந்தத்தை விழுங்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை" என்றே அவர் குறிப்பிட்டார்.அதைத் திரிவுபடுத்தி பிரபாகரன் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டார் என்று இவர்கள்  கூறுவதைக் எவரும் மறுத்துப் பேசவில்லை.  அதனால் தான் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்துக்குப் புலிகள் காரணமல்ல என்று ஒருவரும் தாங்களே உருவாக்கினர் என்று மற்றொருவரும் கூறும் நிலை ஏற்பட்டது.   
யாழ்ப்பாணம் ,நாயன்மார்கட்டு இராஜேஸ்வரி வீதியில் பொட்டம்மான் குடும்பத்தினருக்குச்  சொந்தமான வீடு ஒன்று உள்ளது. பொட்டம்மானுக்கு நேரே மூத்த அண்ணன் சிவஞானகுமார் ஜெர்மனியிலிருந்து வரும் நாட்களில் இந்த வீட்டின் ஒரு அறையில் தங்குவதுண்டு.இந்த வீட்டை படையினரின் ஆதரவாளரான ஒரு குடும்பம் அபகரித்தது. அந்தக் குடும்பத்திற்கு சிவஞானகுமார் ஒரு அறையில் தங்குவது பிடிக்கவில்லை. அதன் விளைவாகவே சிவஞானகுமார் அடிக்கடி விசாரணைக்குள்ளாக்கப்பட்டார். இவ்வாறே ஒரு சம்பவத்தின் பின்னர் திரும்பி வரும் வழியில் அவர் உயிரிழந்தார். அது மகிந்தாவின் காலம்.  எனவே இவரது குடும்பத்தினர் இங்கே வந்து சொந்த ஊரில் இறுதிச் சடங்கு செய்யமுடியாமற் போயிற்று சடலம் ஜெர்மனிக்கு  அனுப்பப்பட்டது.
           
அதே போல் கனகரத்தினம் வீதியில் உள்ள காணியும் இன்னொரு பகுதியினரால் அபகரிக்கப்பட்டது. எங்களை இராணுவம்தான் இங்கே இருக்கச் சொன்னது . நாங்கள் கடைசிவரை இங்கிருந்து போகமாட்டோம் என அக்குடும்பம் சொல்கிறது. அதாவது எதிர்த்துக் கேள்வி கேட்பதற்கு ஆளில்லாவிட்டால்  தேசிய பாதுகாப்புப்பின் பேரால்அதனை அனுபவிப்பவர்கள் தமக்கே அது சொந்தம் என்பார்கள்.அது போலத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வரலாறோடு சம்பந்தப்பட்டவர்கள் வாய்  திறக்க முடியாதவர்கள். எனவே போலிகளான நாமே அரசியல் அடைக்கலம் பெறும் வாய்ப்புகளை பெற்று விட்டோம். முக்கிய பிரமுகரான தராக்கியும் புலிகள் தரப்பில் இவ்விடயங்களைக் கையாண்ட மிக முக்கிய பிரமுகர் எவரும் உயிரோடு இல்லை. எனவே இராஜேஸ்வரி வீதி வீட்டில் குடியிருப்பவர்கள் தமது சொந்த வீடு என்ற நினைப்பில் அடிக்கடி விழாக்கள், வைபவம் என கூத்தடிப்பதுபோல் இவர்களும் தாங்களே வரலாற்று  நாயகர்களாகக் கூத்தடிக்கின்றனர். உண்மையில் வரலாறு என்ன ? யாழ்ப்பாண இடப்பெயர்வுக்கு முன்னரே கூட்டமைப்பின் உருவாக்கத்துக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டு  விட்டது. என்பது இப்பேனா வீரர்களுக்குத் தெரியாது.
புலிகளில் இணைய வந்த தராக்கி.
தராக்கி எனும் சிவராம் உண்மையில் புலிகள் இயக்கத்தில் சேரவே யாழ்ப்பாணத்துக்கு 1983  இல் வந்தவர். பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் மூலம் புலிகளுடன் தொடர்பு கொண்டார். எனினும் புலிகள் இயக்கத்தின் அப்போதைய  நடைமுறையின் படி  அவரை உடனடியாக உள்ளீர்க்க முடியாமற் போயிற்று. ஒருவரின் தொடர்பு கிடைத்தால் அவரைப் பற்றி சில காலம் ஆராய்ந்து,சிறு சிறு வேலைகளைக் கொடுத்து அவற்றை எப்படி செய்கிறார் எனக் கணித்து, சில சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்து குறிப்பிடட நேரத்தில் அக்கறையுடன் இவற்றில் கலந்து கொள்கிறாரா? என ஆராய்ந்த பின்பே அவரை உள்வாங்க முடிவெடுக்கப்படும்.அதற்கிடையில் அவரது தனிநபர் ஒழுக்கம்பற்றி பல வழிகளிலும் ஆராயப்படும்
சிவராம் தொடர்பு கொண்டது. பிரான்சிஸ்சை கிழக்கின் முதற் போராளியான பாசி என்று அழைக்கப்படும் பாலிப்போடி சின்னத்துரை ( யோகன் பாதர் )  தேர்ந்தெடுக்கப்படட போராளிகளுடன் தானும் பயிற்சி பெறுவதற்காக இந்தியாவுக்குச் சென்று விட்டார். போகும் போது அரசியல் தொடர்புகளைப் பேண பிரான்சிஸ்சை (,இராசையா சடாட்சரபவான்,கல்லாறு) நியமித்தார். அக்கால கட்டத்திலேயே  பிரான்சிஸ் தராக்கியை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைத்தார்.
எனினும் தராக்கி எதிர்பார்க்கும் வேகத்தில் உள்ளீர்க்க முடியாதென்ற விடயம் அவருக்கு சுட்டிக் காட்டப்பட்டது. அப்போது டெலோவும்,புளொட்டும் ஆளணியை எவ்விதத்திலும் அதிகரிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் இருந்தன. தராக்கி புளொட்டில் இணைந்து கொண்டார். வவுனியா முதலான இடங்களெல்லாம் அவருக்கு அத்துபடியாகின எனினும்
காந்தியம் என்ற அமைப்பை நாடாத்தி வந்த சந்ததியார், தமிழீழ கழுகுகள் படையை நடத்திய பின்னர் புளொட்டில் இணைந்துகொண்ட  ராஜ்மோகன் போன்றோர் உட்கட்சிப் பூசலினால் காணாமல் போனதும் இவர் தளம்பத் தொடங்கினார்.


புலிகளின் சுவரொட்டிகளை ஒட்டச் சென்ற பாடசாலை மாணவர்கள் படுகொலைசெய்யப்பட்டமையும், மெண்டிஸ் போன்றோரின் அடாவடித்தனமும் அவருக்கு விரக்தியை உண்டுபண்ணின.  
1986 ல் புலிகள் புளொட் இயக்கத்தைத் தடைசெய்ததும் அவர் தனது நடவடிக்கைகைகள் அனைத்தையும் நிறுத்திக் கொண்டார்.இந்திய இராணுவ காலத்தில் புலிகள் இயக்கத்தில் இருந்த சில நண்பர்களின் அறிவுறுத்தலுக்கமைய கொழும்பு வாசியாகி முழுநேர பத்திரிகையாளராக மாறினார்.அவருக்கு இருந்த ஆங்கிலப் புலமை, பிரதேச ரீதியான அறிவு  அவரது கட்டுரைகளில் பரிணமித்தன. ஊடகவியலாளர்களுடன் உறவைப் பலப்படுத்துவதில் அவர் கவனம் செலுத்தினர்.
 எனினும் ஊடகவியலாளர் நித்தியானந்தனை புளொட் மரணத்தின் வாசலைத் தொடுமளவுக்கு படுகாயப்படுத்தியதை அடுத்து தமது நடவடிக்கைகளில் நிதானத்தைக் கையாண்டார். நித்தியானந்தன் பின்னர் விடுதலைப்புலிகளுடன் இணைந்து மாவீரர் ஆனார்.

 

 

நித்தி மீதான தாக்குதலை கண்டிக்கும்  துணிவு எவருக்கும் இல்லை .


நித்தியின் மீதான தாக்குதலை இன்றைக்குத் தாம் மூத்த ஊடகவியலாளர்கள் என்றும், மட்டக்களப்பின் வரலாற்றைப் புரட்டிப் போட்டவர்கள் என்றும் மார்தட்டும் எவருமே கண்டிக்க வில்லை என்பதே வரலாறு.
லேக்ஹவுஸிலிருந்து வந்தவர்களுக்கு இவ்வாறான துணிவு எப்படி ஏற்படும்?.
இந்திய இராணுவத்தின்  வெளியேற்றத்தைத் தொடர்ந்து விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணி நடத்திய நிகழ்வுகளிலோ வாகரை மாநாட்டிலோ இவர்களின் தலைக்கறுப்போ, நரையோ தென்படவில்லை. வீரகேசரி சார்பாக  குமரகுருவும், தற்போது மட்டக்களப்பு பி.பி சி நிருபராக இருக்கும் உதயகுமாருமே அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தைக் சந்தித்தனர்.
 அக்காலகட்டத்திலும், இரண்டாம் ஈழப்போர் தொடங்கிய பின்னரும் மட்டக்களப்பு  அரசியல் பணிமனையில் தொடர்பாளராகவும், கரிகாலன் யாழ்ப்பாணம் சென்றபின் 1993 இல் மட்/அம்பாறை அரசியல் துறைப்பொறுப்பாளராகவும் விளங்கிய குஞ்சு மாஸ்டர் ( தமிழன்பன் )  என்பவரையே தெரிந்திராத நிலையில் தான் தாங்கள் தேசியவாதிகள்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியவர்கள் என்று மார்பு தட்டுகின்றனர்.

கொப்பேகடுவாவின் ஆசீர்வாதம்  லிங்கநாதனுக்கு!

 இரண்டாம் ஈழப்போர் தொடங்கிய பின்னர்  தமக்கு விசுவாசமான ஆயுதக் குழுவாக  இருந்து கொண்டு சிவில் நிர்வாகத்தை நடத்தக்கூடிய ஒரு இயக்கம் ஒன்றைத் தெரிவு செய்ய வவுனியாக் கட்டளைத்  தளபதி டென்சில் கொப்பேகடுவ தீர்மானித்தார். அதற்கு புளொட்டே பொருத்தமானதாக அவருக்குத் தெரிந்தது. ஏனெனில் ஈ.பி.ஆர்.எல்.எப்,டெலோ போன்றவை இந்தியாவின் செல்லக் குழந்தைகளாக இருந்தவை.. புளொட் ஒன்றுதான் பொருத்தமானது.மாலைதீவில் புரட்சி செய்யப்போய் நொந்து கெட்டிருக்கும் இயக்கம் என்ற வகையில் அதுதான் சொன்னதைச் செய்யும் என அவர் நம்பினார்.
வவுனியா நகர சபைத் தேர்தலில் புளொட்டைக் களமிறக்கினார். இன்று வடக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சர் பதவியை எதிர்பார்த்து அது கிடைக்காத நிலையில் தற்போதைய அமைச்சர் பொ. ஐங்கரநேசனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை சுமத்தும் லிங்கநாதன் கொப்பேகடுவவினால் ஆசீர்வதிக்கப்பட்டவரே.


  அவரே நகரசபைத் தலைவரானார். அரசின் முதல் தெரிவான புளொட்டுக்கே வரி அறவீட்டில்  முன்னுரிமை. வவுனியாவிலிருந்து  புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரும் பாரஊர்திகளுக்கான  வரியைச் செலுத்தும் போது புளொட்டுக்கு அடுத்ததாகத்தான் டெலோ.ஈ.பி.ஆர்.எல்.எப்  முதலான இயக்கங்களைக் சுட்டிச் காட்டுபவர். தாம் இரண்டாம் தர இயக்கங்களாக அரசால் பார்க்கப்படும் நிலை, புலிகள் மீதான அச்சத்தினால் நிம்மதியாக நித்திரை கொள்ளாத அவலம் -  இதை விட மட்டக்களப்பில் டெலோவின் ஜனா.ஈ.பி.ஆர்.எல்.எப் வின் ராசிக்குழு நேரடியாக படைகளால் வழிநடத்தப்பட்டமை. போன்றவை அவர்களுக்கு சலிப்பூட்டின .மாற்று வழிக்கான கதவு திறக்காதா எனக் காத்திருந்தனர்          
இதேவேளை பொட்டம்மானும் அவருக்கு நெருக்கமானவர்களும்  எத்தனை முனைகளில் பகையைக் குறைக்கலாம் விடுதலைப் போருக்குச் சாத்தியமான வகையில் யார் யாரை அணுகலாம் எனச் சிந்தித்தனர். அந்த வகையில் அவர்களது  முதல் தெரிவு தராக்கியாக  இருந்தது. அவரது கட்டுரைகளில் இருந்த  விடயங்கள்  அவரைச்  சந்திப்பதை விரைவு படுத்தியது ( புலிகள் வெளியிட்ட மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் நூல்களில் கணிசமான இடத்தைப் பிடித்தவை தராக்கியுடையனவே ( இவ் வெளியீடுகளில் யோகி மிகவும் ஆர்வம் காட்டினார்.)  
தராக்கி,முதல் சந்திப்பு பொட்டம்மானுடன்!
  1994 சந்திரிக்காவுடனான பேச்சு வார்த்தைக் காலங்களில் தராக்கியுடனான சந்திப்பு இடம்பெற்றது. யாழ் போதனா  வைத்தியசாலைக்குப் பின்புறமாக உள்ள விக்டோரியா வீதியில்யுள்ள சுபாஷ்  ஹோட்டலில் இவர் தங்கியிருந்தார். (இதே ஹோட்டலில் பிபிசி ஆனந்தியும்தங்கியிருந்தார் ) நுணாவிலில் உள்ள ஒரு இடத்தில் இவருடனான  சந்திப்பு இடம்பெற்றது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள இச்சந்திப்பு வழிவகுத்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்துக்கான அடித்தளம் இதில்தான் போடப்பட்டது .குளுவன் மாடுகள் போன்று திரியும் இயக்கங்களுக்குக்  கயிறு எறிந்து குணத்தை மாற்றும் பொறுப்பு த்தராக்கியிடம் ஒப்படைக்கப்பட்டது . இது இலேசான விடயமல்ல . இவ்வளவு காலமும் தமது கட்டுப்பாட்டில் இருந்த ஆயுதக் குழுக்களின் கவனத்தைப் புலிகள் பக்கம் திருப்புவது படையினரால் ஏற்கமுடியாது.இது தெரிந்தும் அபாயகரமான இப்பணியில் அவர் இறங்கினார் .


இதன் தொடர்ச்சி பகுதி 3 இல்  எதிர்பாக்கவும் . 

கூட்டமைப்பின் உருவாக்கம் எப்படி நிகழ்ந்தது ! (அங்கம்:1)

  

  

  வரலாற்றில் மறைக்கப்படும் சத்தியங்கள்...

Read More