சுனாமியும் நாமும்

26ஆம் திகதி இடம்பெற்ற அனர்த்தம் எமது மக்களைப் பொறுத்தளவில் இரண்டாவது சுனாமியே.
– தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.

கடலடி நிலநடுக்கத்தால் எழும் பேரலைகள் ஜப்பான் மொழியில் சுனாமி எனப்படுகின்றன. கடலடி நிலநடுக்கம், கடலடி எரிமலை, புவி மேற்புறத் தகடுகளின் உராய்வு என்ற முக்காரணங்களால் ஆழிப்பேரலைகள் எழுகின்றன. கடலின் மேற்புறத்தில் காணப்படும் வழமையான அலை காற்றின் அழுத்தத்தாலும் சூரிய, சந்திரரின் இழுவையாலும் இரவு பகலாகத் தொடர்ந்து நடைபெறுகின்றன. ஆழிப்பேரலை எதிர்பாராத சடுதி நிகழ்ச்சி. இதன் காரணமாக அழிவுகள் மிகக் கூடுதலாக ஏற்படுகின்றன. பசுபிக் மாகடலில் ஜப்பான் தொட்டு கலிபோர்னியா வரையிலான பகுதியில் ‘நெருப்பு வளையம்’ (RING OF FIRE) இருப்பதாகச் சொல்லப்படுகின்றது. பசுபிக் மாகடலின் இருபுறமுள்ள ஜப்பான், வட அமெரிக்காவின் கலிபோர்னியா ஆகிய தரைப்பரப்புகளுக்கு அண்மையில் நிலநடுக்க வளையம் காணப்படுகிறது. இதன் காரணமாக பசுபிக் மாகடலில் ஆழிப்பேரலைகள் எழுந்தவாறு உள்ளன. கூடுதலாக ஜப்பான் தீவுகள் பாதிப்படைகின்றன. இவ்வகை அலைகளுக்கு ஜப்பான் நாட்டவர் வைதத் பெயர் இன்று எல்லா மொழிகளுக்கும் பொதுவான சொல்லாக வழங்குகிறது.

அமெரிக்காவின் ஐம்பதாவது மாநிலமான ஹவாய் தீவுத்தொகுதி அமெரிக்காவின் முப்பத்தியொராவது மாநிலமான கலிபோர்னியாக் கடலோரத்திலிருந்து 2,400மைல் தூரத்தில் காணப்படுகிறது. இத்தீவுகளில் சுனாமித் தாக்கம் அதிகளவில் உண்டு. இங்குவாழும் மக்கள் கடலின் குண இயல்புகளை நன்கு உணர்ந்து உயிர்வாழக் கற்றுள்ளனர். கடல்நீர் வெகுதூரம் பின் நோக்கிச் செல்வதைக் கண்டால் இத்தீவு மக்கள் எதிர்த்திசையில் ஓடி மேட்டுப் பகுதிகளில் தஞ்சம் புகுவார்கள். பசுபிக் மாகடலின்  நடுப்பகுதியில் இருக்கும் தீவுகளில் எரிமலைகள் வெடித்து அனல் கக்கிக்கொண்டே இருக்கும். கடலடியில் தோன்றிய எரிமலைகள் பல நூற்றாண்டு காலப் பகுதியின்பின் ஹவாய்த்தீவுகளாக எழுந்து நிற்கின்றன. சில தீவுகளில் இன்றும்
அணையாத எரிமலைகள் காட்சி தருகின்றன.

ஆழிப்பேரலை அனர்த்தங்கள்  பசுபிக் மாகடல் பிராந்தியத்தில் கூடுதலாக நடந்தாலும் இந்து மாகடல், அத்திலாந்திக் மாகடல் போன்றவற்றிலும் அவை காலத்திற்குக் காலம் நடைபெறுவதை புவி வரலாறு உணர்த்துகின்றது. நவீன ஐரோப்பிய வரலாற்றில் மிகப்பெரும் சேதத்தை விளைவித்த ஆழிப்பேரலை 250 வருடங்களுக்கு முன்பாக நவம்பர் 01, 1755ஆம் நாள் போர்த்துக்கல் நாட்டில் நடைபெற்றது. இந்த நாட்டின் அத்திலாந்திக் கடலோரத்தில் நடந்த கடலடிப் புவிநடுக்கம் பிரமாண்டமான அலைகளைக் கிளப்பியது. தலைநகா லிஸ்பனில் (LISBON) மீது மோதிய கடலலைகள் லிஸ்பனில் மாத்திரம் 30,000வரையிலான மனித உயிர்களைக் காவுகொணடது. ஐரோப்பாவின் அப்போதைய நான்காவது மிகப்பெரிய நகரமாகவும், ஐரோப்பாவின் அதியுச்ச செல்வந்த நகரங்களில் ஒன்றாகவும் இருந்த லிஸ்பன் தனது பழைய நிலைக்குத் திரும்பாமல் இன்றுவரை நலிவுற்றுக் காணப்படுகிறது.

போர்த்துக்கல் நாட்டின் தென்கரையோரம், தென்மேற்கு ஸ்பெயின், வடஆபிரிக்கா, என்பனவும் இவ்வாழிப் பேரலையால் பாதிப்படைந்தன. பெல்ஜியம், பிரித்தானியா, பிரான்சு, அயர்லாந்து, நெதர்லாந்து எனப்பனவும் போர்த்துக்கல்லுக்கு சொந்தமான அத்திலாந்திக் கடலின் நடுவிலுளள் அஸோர்ஸ் தீவுகளும் கரையோர அழிவுகளைச் சந்தித்தன. அன்று பதிவான உயிர் தப்பியோரின் வாக்குமூலங்களின்படி அண்மையில் நடந்ததுபோல் கடல் பின்னோக்கிச் சென்ற சிறிது நேரத்தின்பின் முழுமூச்சுடன் முன்னோக்கிவந்து தரைப் பகுதிக்குள் புகுந்து அழிவை ஏற்படுத்தியது. பொருளாதார ரீதியாக மிகவும் நலிவுற்ற போர்த்துக்கல் நாட்டில் இன்றும் ஆழிப்பேரலை சம்மந்தமான பீதி தீரவில்லை. தெற்கு ஆசியா சந்தித்த அனர்த்தத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக ஒரு சிறியரக நிலநடுக்கம் அங்கு ஏற்பட்டது. இப்போது போர்த்துக்கல் நாட்டு ஊடகங்கள் கேட்கும் முக்கிய கேள்வி இதுதான்: நவம்பர் 01, 1755இல் நடந்தது போல் மீண்டும் நடந்தால் அதை எதிர்கொள்ளத் தயாரா? தயாரில்லை என்று அவர்களே பதில் கூறுகிறார்கள்.

டிசெம்பர் 26, 2004வரை இந்திய – இலங்கை கடற்பகுதியில் ஆழிப் பேரலைகளுக்கு வாய்ப்பில்லை என்ற பரவலான கருத்து நிலவியது. கடற்கோள் என்பது தமிழர்தம் தொன்மை வரலாற்றுடன் நெருங்கிய தொடர்புடைய சொற்றொடர். நிலவியல் நிபுணாகள் கூற்றுப்படி மடகஸ்கார், இலங்கை, இந்தியா உட்பட டெக்கான் பள்ளத்தாக்கு வரையிலான பிரதேசம் ஒரே நிலத்தொகுதியாக இருந்ததென்றும் அது லெமூரியா கண்டம் என்று அழைக்கப்படுவதாகவும் கூறுகின்றனர். தமிழ் இலக்கியத்தில் இது குமரிக்கண்டம் எனப்படுகின்றது. அமெரிக்காவின் கோர்னெல் பல்கலைக்கழக ஆராய்ச்சிக் குழுவினர் கொன்ட்வானா என்ற பெயரில்  இலங்கை நாடு மடகஸ்கார் தொட்டு அவுஸ்ரேலியா வரை பரந்து கிடந்ததாகவும், இப்போதைய இலங்கைத்தீவு அதன் ஒரு சிறுபகுதி என்றும் தெரிவிக்கின்றனர். மாலைதீவு மற்றும் இலட்சதீவுத் தொகுதிகளின் விலங்கியல் மற்றும் புவியியல் (THE FAUNA AND GEOGRAPHY OF MALDIVES AND LACCADIVES ARCHIPELAGO) என்ற நூலை எழுதிய ஜே.எஸ்.கார்டினர், “இலங்கை, மடகஸ்கார், மாலைதீவு ஆகியவை முன்னொருகால் இணைந்திருந்தன.” என்கிறார். மடகஸ்கார் தீவு கோமார் (KOMAR) என்ற பெயரால் வழங்கப்படுவதும், அங்குவாழும் மக்கள் கொம்றி (KOMARI) என்று அழைக்கப்படுவதும், அங்குள்ள கடல் கொமோறொஸ் (COMOROS) என்றும், சில தீவுகள் கொமேரோ (COMERO ISLANDS) எனப்படுவதும் குமரிக்கண்டம்  முதலாயவற்றை நினைவுபடுத்துகின்றன. கடலில் மூழ்கிய முதுதமிழ் நிலமான குமரிக்கண்டம் பற்றிய ஆய்வுகள் முழுமை பெறாதிருப்பது கவலைக்குரியது.

ஆழிப்பேரலைகள் பெருமளவு நிலப்பரப்பை விழுங்குகின்றன, புதிய நிலப்பரப்புகளை உருவாக்குகின்றன. கடலடி நிலங்கள் மேலெழுந்து காலப்போக்கில் மனித வாழ்விடங்களாக மாறுகின்றன. மாற்றம் என்பதே மாறாத விதி என்ற நியதிக்கு அமைவாக இது நடைபெறுகின்றது. இலங்கைப் புதைபடிவத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் எஸ்.யூ.தெரனியகல (Dr.S.U.DERANI YAGALA, FORMER DIRECTOR GENERAL OF ARCHAEOLOGY) செய்த ஆய்வுகளின்படி கடற்கரையோரத்தில் காணப்படும் சரளைக் கற்கள் (GENERAL) இலங்கைத்தீவின் பல பாகங்களில் கானபடுவதாக அறிகிறோம். இலங்கையின் கீழ்ப்புறத்தே புந்தல (BUNDALA) எனும் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து பதினைந்து மீற்றர் உயரத்தில் இவ்வகைக் கற்கள் அடையாளங் காணப்பட்டுள்ளன. இவை 125,000 வருடங்கள் பழமை வாய்ந்தவை என்று காலநிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மிகவும் பழமைவாய்ந்த கடலோரச் சரளைக் கற்கள் மாங்குளத்தில் காணப்படுவதாகவும், அவை கடல் மட்டத்திலிருந்து 60 தொடக்கம் 80மீற்றர் வரையிலான உயரத்தில் இருப்பதாகவும் தெரியவருகிறது. தான் இப்படிவத்தை காலக்கணிப்புச் செய்யவில்லை என்று டாக்டர் தெரனியகல தெரிவித்துள்ளார்.

ஆதி மனிதர்கள் பயன்படுத்திய புராதனக் கருவிகள் மாங்குளம் உள்ளிட்ட மேற்கூறிய கடலிலிருந்து எழும்பிய பகுதிகளில் கிடைப்பதாகவும் தெரனியகல தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். புவித் தகடுகளின் மோதல் காரணமாக இப்பகுதிகள் மேலெழும்பியுள்ளன. அது ஒரு மில்லியன் வருடங்களுக்கும் குறைவான காலப்பகுதியில் நடந்திருக்கலாம் என்பது ஆய்வாளர் முடிவு. இதில் கூறப்பட்ட ஆய்வுத்தரவுகள் அமெரிக்க பல்கலைக்கழகங்களான கோர்னெல் (CORNELL) மற்றும் ஹவட் (HARVARD) ஆகியவற்றில் வைப்பிலிடப்பட்டுள்ளன. தகடுகளின் உராய்வுப் பகுதிக்கு அப்பால் மிகவும் பாதுகாப்பான பகுதியில் இன்றைய இலங்கை இருக்கிறது என்று சொல்வது தவறு. இலங்கையின் கரையோரம் வேகமாக மாறிவருகிறது. அதன் உருவமைப்பும் வரைபட விம்பமும் மாற்றம் அடைகின்றன. கரையோரத்தில் குடியிருப்புக்களை அமைப்பது மிகவும் ஆபத்தானது. யால சரணாலயத்திலும் கடல் மட்டத்திலிருந்து 40மீற்றர் உயரத்தில் கடலோரச் சரளைக் கற்கள் காணப்பட்டுள்ளன. பூமிப்பந்தில் 71வீதமானது நீராகவும் 29வீதம் நிலமாகவும் காணப்படுவதால் நிலப்பரப்பு மூழ்குவதற்கு கூடுதல் வாய்ப்புக்கள் இருக்கின்றன. அதே சமயத்தில் புதிய நிலம் தோன்றுவதற்கும், ஏற்கனவே உள்ள நிலம் உருவமைப்பு மாற்றம் அடைவதற்கம் சம அளவு வாய்ப்புக்கள் இருக்கின்றன.

பூமிப்பந்தின் உட்புறத்தே அதன் நடுப்பகுதியில் பூமியை ஒத்த வட்ட வடிவில் ஒரு இரும்பு மற்றும் நிக்கல் உலோக உருண்டை இருக்கிறது. இதுபற்றி ஆய்வுசெய்த அமெரிக்க கொலம்பியா பல்கலைக்கழகத்தின் லமொன்ற் – டொகேர்றி புவி ஆய்வு நிலையம் (LAMONT DOHERTY EARTH OBSERVATORY) ஜுலை 1996இல் பல வியப்பூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளது. சந்திரனின் பருமனுடைய இந்த உருண்டை பூமியைப் போல் தன்னைத் தான் சுற்றிக்கொண்டிருக்கிறது. பூமி தன்னைத் தான் ஒருமுறை சுற்றுவதற்கு 24 மணிநேரம் எடுக்கிறது. ஆனால் இந்த உட்பகுதி உருண்டை சற்றுக் கூடுதலான வேகத்தில் தன்னைத் தான் சுற்றுகிறது. அதனுடைய சுற்றுவேகம் எப்போதும் ஒரே வேகத்தில் இருப்பின் 400 வருடங்களில் பூமியிலும் பார்க்க ஒருசுற்றுக் கூடுதலாகச் சுற்றிவிடும் என்று இந்த ஆய்வு நிலையம் கூறுகின்றது. இப் பரபரப்பான ஆய்வுச் செய்தி ஜுலை 29, 1996 ரைம் சஞ்சிகையில் பிரசுரமாகியுள்ளது. பூமியின் நடுவே திடமான உருண்டை இருப்பது  விஞ்ஞானிகளுக்கு ஏற்கனவே தெரிந்த உண்மை, அது சுற்றிக்கொண்டிருக்கிற செய்தி 1996இல் தான் தெரிந்தது.

பூமிப்பந்து உட்புறத்திலிருந்து வெளிப்பகுதி வரையில் மூன்று முக்கிய படலங்களைக் கொண்டது. மேற்கூறிய திடமான உட்புற உருண்டையை விட இன்னும் இரு பாகங்கள் இருக்கின்றன. உருண்டையைச் சுற்றி திரவநிலைப் பாறைகளும் உலோகங்களும்  இருக்கின்றன. திரவப் பகுதிக்குமேல் 1,800மைல் வரையான தடிப்பில் மான்றில் (MANTLE) எனப் பெயரிடபப் டட் பாறைப்படலம் காணப்படுகிறது. மான்றிளுக்கு மேல் ஒப்பீட்டில் தடிப்புக் குறைந்த புவி மேலோடு இடம்பெறுகிறது. புவி மேலோட்டுப் பகுதியை கிறஸ்ற் (CRUST) என்று அழைப்பார்கள். புவி மேலோட்டின் தடிப்பு தரையில் 30 மைலாகவும் ஆழ்கடலடியில் 03 மைலாகவும் இருக்கலாமெனக் கணிப்பிடப்படுகிறது. புவி ஆய்வாளர் நோக்கில் (01) உட்புற உருண்டையும் அதைச் சுற்றியுள்ள திரவப்பகுதியும் ‘கோர்’ (CORE) என்றும் (02) அதற்கு மேலுள்ள பகுதி ‘மான்றில்’ (MANTLE) என்றும் (03) மேற்புற ஓடு ‘கிறஸ்ற்’ (CRUST) என்றும் அடையாளம் காணப்படுகின்றன. பூமியின் மேற்புறம் ‘லிதொஸ்பியா (LITHOSPHERE) என்றும் அழைக்கப்படுவதுண்டு.

புவி மேலோடு 40கி.மீ தொடக்கம் 800கி.மீ வரையிலான தடிப்புள்ள 7 பெரிய மற்றும் 20 சிறிய துண்டுகளாக இடம் பெறுகின்றன. இவை ‘ரெக்ரோனிக் பிளேற்ஸ்’ (TECTONIC PLATES) எனப்படுகின்றன. தமிழில் கண்டத் தகடுகள் எனலாம். கண்டங்களும், கடல்களும் இத்தகடுகளின் மேற்புறத்தில் இருப்பதால், தகடுகள் நகரும்போது அவையும் சேர்ந்து இடம்பெறுகிள்றன. ‘கண்டப் பெயர்ச்சி’ என்ற கோட்பாடு 1910இல் அல்பிறெட் வேக்கினர் (ALFRED WEGENER) என்ற ஜேர்மன் விஞ்ஞானியால் உருவாக்கப்பட்டது. இவருடைய கூற்றுப்படி 200 மில்லியன் வருடங்களுக்கு முன் ஒரேயொரு கண்டம் மாத்திரம் இருநத் தாகவும் அது பகுதி பகுதியாக காலப்போக்கில் உடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. உடைவுக்கு புவித் தகடுகள் காரணமாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. 1960கள் வரை வேகினரின் கோட்பாடுகள் ஆதரவு பெறவில்லை. தகடுகளின் இருப்பும் செயற்பாடுகளும் இக்காலப்பகுதியில் ஏற்றுக் கொள்ளப்பட்டபின் கண்டப் பெயர்ச்சிக் கோட்பாடு வலுப்பெற்றது.

தகடுகள் அசைவதற்கான காரணம் பூமியின் அசாதாரண உள்வெப்பம் எனப்படுகிறது. பூமியின் உட்புற வெப்பம் 5000பாகை பரனைற் என்று விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர். ஒரு பாத்திரத்தில் கொதித்துக்கொண்டிருக்கும் நீரில் கொதிநீர் மேலும் கீழுமாகச் சுற்றுவதுபோல பூமியின் வெப்ப ஆவியும் சுற்றுகிறது.  இது தகடுகளை அசைக்கப் போதுமானதாக இருக்கிறது. எல்லாக் கண்டங்களும் அசைந்தபடியே இருக்கின்றன. இதற்கு தகடுகளின் நகர்வு காரணமாகிறது. இதுதான் கண்டப் பெயர்ச்சியின் விளக்கம். கடந்த 30 வருடங்களாக தகட்டு நகர்வு விளக்கம் ஆதிக்கம் செலுத்துகிறது. நோர்வேயின் பேர்கன் பல்கலைக்கழகப் பேராசிரியர் கார்ஸ்ரன் ஸ்ரோறெற்வெற் (KARSTEN STORET VEDT) வெளியிட்ட கருத்துப்படி பூமி தன்னைத் தான் சுற்றுவதால் ஏற்படும் நீர், நிலக் குலுக்கல் பூமியின் நடுப்பகுதியில் இருக்கும் உலோகம் செலுத்தும் புவியீர்ப்பு என்பனவற்றையும் தகட்டு அசைவின் கூட்டுக் காரணங்களாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். எது எவ்வாறாக இருப்பினும் தகடுகள் நகர்ந்து கொண்டிருக்கின்றன, புவிமாற்றங்கள் தொடர்ச்சியாக நடக்கின்றன என்பன மறுக்கமுடியாத உண்மைகளாகும்.

பாரிய அழிவுகளை ஏற்படுத்தும் புவி நடுக்கங்கள் மேற்கூறிய தகடுகள் உராயும்போது அல்லது பலமாக மோதும்போது ஏற்படுகின்றன. புதிய தகடுகள் உருவாகும்போது, புவிநடுக்கம் அதற்குக் காரணமாக அமைகின்றது. அமெரிக்காவின் புவியியல் ஆராய்ச்சிக் கழகம் (US GEOLOGCAL SURVEY) வெளியிட்ட தரவுகளின்படி வருடமொன்றுக்கு மூன்று மில்லியனுக்கும் கூடுதலான புவிநடுக்கங்கள் நடைபெறுகினற் ன. அதாவது, நாளொன்றுக்கு  8,000 புவிநடுக்கங்கள் என்ற விகிதத்தில்.  ஆனால் சில வருடங்களுக்கு ஒருமுறை நடப்பவைதான் ஊயிரழிவையும் பொருட் சேதத்தையும் ஏற்படுத்தும் வலுவுள்ளவையாக அமைகின்றன. புவிநடுக்கத்தின் வலு அளவீடு றிச்ரர் ஸ்கேல் (RICHTER SCALE) என்று அழைக்கப்படுகிறது. புவிநடுக்க அளவீடை உருவாக்கியவர் சாள்ஸ் றிச்ரர் என்ற அமெரிக்கப் புவியியல் விஞ்ஞானி.  அவர் இவ்வளவீடை 1935இல் உருவாக்கினார். இந்த அளவீடின்படி 1 அல்லது 2 வலுவுள்ள புவிநடுக்கத்தால் யாதொரு ஆபத்தும் இல்லை. அவற்றை உணர்வதும் கடினம். வலுக்கூடியவை 10வரை செல்கின்றன. அவை பேரழிவை ஏற்படுத்துகின்றன.

டிசெம்பர் 26, 2004ஆம் நாள் சுமாத்திரா தீவின் ஆச்சே மாநிலத்திற்கு அருகாமையிலுள்ள கடலில் மிகப் பிரமாண்டமானதொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது பூமியின் அச்சை உலுக்கியதோடு பூமியில் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது. இந்த நிலநடுக்கத்தின் றிச்ரர் அளவீடு 9 என்று கணிப்பிடப்பட்டுள்ளது. 1964 மார்ச்சு 27ஆம் நாள் அமெரிக்காவின் 49வது மாநிலமான அலாஸ்காவின் மிகப்பெரிய நகரமான அன்கறேஜ் (ANCHORAGE) பகுதியை உலுக்கிய நிலநடுக்கத்திற்கு நிகரானதாக சுமாத்திராவின் 9 அளவீடு இடம்பெறுகிறது. 26ஆம் நாளுக்குப்பின் தொடர்ச்சியாகச் சில நிலநடுக்கங்கள் இப்பகுதியில் ஏற்பட்டன.  அவற்றின் சராசரி அளவீடு 5. பெரும்பாலான நிலநடுக்கங்களும் எரிமலைகளும் புவித்தகடுகளின் முட்டிமோதலால் ஏற்படுகின்றன என்று முன்பு கூறினோம். அதுதான் இங்கும் நடைபெற்றது. கடலடிப் பூகம்பத்தின் மிக முக்கிய விளைவாக சுனாமி அலைகள் தோன்றுகின்றன. பெரும் பாறைகளும் களிமண் குவியல்களும் கடலின் ஒரு பகுதியிலிருந்து இன்னோர் பகுதியில் விழும்போதும் சுனாமி அலைகள் கிளம்புகின்றன.

சுனாமி என்ற ஜப்பான்மொழிச் சொல் “நாமி” என்றால் அலைகள் “ற்சு|” என்றால் துறைமுகம் அல்லது ஒடுக்கமான நிலப்பகுதி என்ற இரு சொற்களின் கூட்டாகும். சுனாமி என்றால் புயல் என்றும் அர்த்தம் கூறுவோர் உள்ளனர். பலநூறு கிலோமீற்றர் நீளமானதாகவும் பத்து மீற்றருக்கும் கூடிய உயரமுள்ளதாகவும், ஜெற் விமானத்தின் பறப்பு வேகத்திலும் கூடிய வேகமுடையதாகவும் சுனாமி அலைகள் இடம்பெறுகின்றன. டிசெம்பர் 26ஆம் திகதிச் சுனாமி அலை 600கி.மீ தூரத்தை 75 நிமிடங்களில் கடந்தது.   இது மணிககு; 480கி.மீ என்று அளவிடப்படுகிறது. கடலின் ஆழமான பகுதிகளில் சுனாமி அலைகளின் உயரம் அசாதாரணமாக இருப்பதில்லை. அப்படியான கடலில் பயணிக்கும் கப்பல்களின் கீழால் சுனாமி அலைகள் செல்வதை கப்பலில்
இருப்போர் அவதானிப்பது கடினம். கரையை நெருங்கும்போது சுனாமி அலைகள் உயரக் கிளம்புகின்றன.   1960இல் தென் அமெரிக்காவின் சிலிநாட்டு கரையோரத்தில் 8.5 றிச்ரர் வலுவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிலிருந்து கிளம்பிய சுனாமி அலைகள் பசுபிக் மாகடலை குறுக்கறுத்துப் பாய்ந்து ஜப்பான் கரையோரம்வரை சென்றன.  இதனால் ஜப்பான் பேரழிவைச் சந்தித்தது. பசுபிக் மாகடலின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு 24 மணிநேரத்தில் சுனாமி அலைகள் முன்னோக்கிச் செல்லமுடியும். இலங்கையின் கிழக்கு, தெற்குப் பகுதிகளைத் தாக்கிய அலைகள் 1400கி.மீ தூரத்தைக் கடந்து வந்துள்ளன. இத்தூரத்தைக் கடப்பதற்கு அவை ஒன்றரை மணிநேரம் எடுத்தன. அலை வருவதுபற்றி முன்னறிவித்தல் கிடைத்திருந்தால் பல மனித உயிர்களையும் பெறுமதிமிக்க சொத்துக்களையும் நிச்சயமாக காப்பாற்றியிருக்க முடியும். தவறுகளைச் சாதகமாக்கியபடி நாம் எதிர்வரும் காலத்தில் உயிர்காக்கும் திட்டங்களை வகுத்தல்
வேண்டும்.

எங்கும் நடக்கலாம், எப்போதும் நடக்கலாம் என்பது மறுக்கமுடியாத உண்மையாக இருப்பினும் உலகின் மிகக் கூடுதலான சுனாமி அலைகள் பசுபிக் மாகடலில்தான் தோன்றுகின்றன. இதற்கு ஆயிரத்திற்க்கும் கூடுதலான எரிமலைகள் பசுபிக் கடலடியில் இருப்பது காரணமாக இருக்கிறது. மிகக் கூடுதலாக சுனாமியால் பாதிக்கப்படும் நாடுகளில் ஜப்பான் முதலிடமும், அமெரிக்காவின் மேற்குக்கரைப் பகுதியும், ஹவாய்த் தீவுகளும் அடுத்த இடம் வகிக்கின்றன. இந்த நாடுகள் சுய பாதுகாப்புக் கருதி மிகவும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளன. கருத்தூட்டல் மூலம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஜப்பானியப் பல்கலைக்கழகங்களில் இதுபற்றிய ஆய்வுகளுக்கு ஒரு கல்விப்பீடம் ஒதுக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக பசுபிக் கடலடியில் நிறுவப்பட்ட முன்னறிவித்தல் சாதனங்கள்மூலம் தரைக் கட்டுப்பாட்டு நிலையங்களுக்கு தகவல் வழங்கும் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. இந்து மாகடலிலும் இப்படியான ஒழுங்குகள் செய்வது பற்றிய பேச்சுக்கள் அடிபடுகின்றன.   டிசெம்பர் 26 அனர்த்தங்களை நாம் ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு தொழில் வசதிக்குத் தன்னும் கடலோரத்தில் வாழ்வதைத் தவிர்க்கவேண்டும். கள்ளப்பாடு போன்ற தாழ்வு நிலங்களில் குடியிருப்புக்களை அமைக்கக்கூடாது. அதேபோல், முல்லைத்தீவு போன்ற கடலுக்குள் நீண்டிருக்கும் தரைப்பரப்பின் ஓரத்தில் வாழாது உயரமான பின்பகுதிகளில் குடிபுகவேண்டும். தடுப்புச் சுவர்களை எழுப்புவது மூலம் ஆழிப்பேரலையின் மூச்சைத் தணிகக் முடியும். வருமுன் தடுப்பது எமது வருங்காலத் திட்டங்களின் அடிப்படை நோக்காக இருத்தல்வேண்டும்.

சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் மனிதநேயத் தலையீடு என்ற புதிய சர்வதேச அரசியல் கோட்பாடு தோற்றம் பெற்றுள்ளது. இதன் சாராம்சம் பின்வருமாறு: எந்தவொரு நாட்டில் பாரிய மனித உரிமை மீறல்கள் நடக்கின்றனவோ, அல்லது எந்தவொரு நாட்டில் அரச நிர்வாகம் முற்றாகச் சீர்குலைந்து பாரிய குழப்பமும் மனித அவலமும் நிகழ்கின்றதோ அலல்து இயற்கை அனர்த்தம் காரணமாக உயிரிழப்பும் பாரிய அழிவுகளும் நடைபெறுகின்றனவோ அவை தனியொரு நாட்டின் விவகாரம் அல்ல. மூன்றில் எதுவானாலும் அது உலகநாடுகள் யாவற்றின் பொது விவகாரம் என்பதால் பாதிக்கப்பட்ட நாட்டிற்குள் மனிதநேயப் பணியாற்றும் நோக்கில் உட்பிரவேசிக்கும் உரிமை உலகநாடுகளுக்கு உண்டு. இந்த அடிப்படையில் நாடுகளும் தன்னார்வத்
தொண்டு நிறுவனங்களும் டிசெம்பர் 26 அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்குப் படையெடுத்துள்ளன. மனிதநேயப் பணிகளுக்கென வந்துள்ள பிறநாட்டு ஆயுதப்படைகளும் மருத்துவக் குழுக்களும் இக்கோட்பாட்டின்  அடிப்படையிலேயே வந்துள்ளன. உலகநாடுகளும் பிற ஸ்தாபனங்களும் நிவாரணப் பணிகளுக்காக பெருமளவு நிதியைத் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளன.  1998ஆம் ஆண்டு மத்திய அமெரிக்க நாடான ஹொண்டுராஸ் “மிற்ச்” (MITCH) எனப் பெயரிடப்பட்ட பெரும் புயலால் பாதிக்கப்பட்டது. உலகநாடுகள் பெருமளவு நிதியைத் தருவதாக வாக்குறுதி அளித்தன. பல வாக்குறுதிகள் இன்றுவரை நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன.  வாக்குறுதிகளை  மாத்திரம் நம்பியிராது எமது நாட்டை நாமே கட்டியெழுப்ப எமது மக்களுக்கு எது தேவையோ அதை இனங்கண்டு நாமே அவற்றை நிறுவ வேண்டும். இரு தசாப்தம் நீடித்த சுனாமியிலும் கொடிய போர் அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்த நாம் மிக அண்மையில் எம்மைத் தாக்கிய சுனாமியில் இருந்து மீள நிச்சயம் முடியும்.

கலாநிதி க.சோமாஸ்கந்தன்.
விடுதலைப்புலிகள் (மார்கழி 2004 – தை, 2005) இதழிலிருந்து

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

  

  

  தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும்.

Read More