மொட்டைத்தலைக்கும் முழங்காளுக்கும் முடிச்சுப்போட்ட அமீரலி!

கடந்த முறை நடைபெற்ற அபிவிருத்திக்குழு கூட்டத்தில் நடைபெற்ற விடயங்களை மூன்று அரச அதிகாரிகள் தங்களது கையடக்க தொலைபேசியின் ஊடாக முகநூலில்  நேரடியாக ஒளிபரப்பச் செய்ததாக கூறி இன்று(26) ஊடகவியலாளர்களை தடைசெய்தமையானது மொட்டைத்தலைக்கும் முழங்காளுக்கும் முடிச்சுப்போடும் செயல் என ஊடகவியலாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

 இன்று நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டத்திற்கு ஊடகவியலாளர்களை அனுமதிக்க முடியாது என மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர்களில் ஒருவரான பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தெரிவித்தமை தொடர்பாக ஊடகவியலாளர்கள் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.

அவர்கள் மேலும் கூறுகையில்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்றுவரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் பொதுமக்களுக்கான வாழ்வாதார திட்டங்களில் நடைபெறுகின்ற ஊழல்களை மூடிமறைக்க மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு முயற்சி செய்கின்றதா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இன்றையதினம் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டத்திற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவமானது மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்றுவரும் ஊடக அடக்குமுறையின் தொடர்ச்சியாகவே பார்க்கவேண்டியுள்ளது.


மகிந்தராஜபக்ச அரசாங்கத்தில் ஊழல்களினால் ஊரிப்போன அரச நிர்வாகம் இன்றுவரை அதில் இருந்து மீண்டுவர முடியாமல் தவிர்த்துக்கொண்டிருக்கின்றது.


அரச நிர்வாகத்தில் பாரிய இலஞ்ச ஊழல் நடைபெறுவதாக மாவட்ட அரசாங்க அதிபரே ஒத்துக்கொண்டுள்ள நிலையில். அது குறித்த உண்மைகள் வெளிவருவதை தடுப்பதற்கான முயற்சிகளையே அரச நிர்வாகமும் அரசியல்வாதிகளும் மேற்கொண்டு வருகின்றனர்.

இன்றையதினம் வழமைக்கு மாறாக குறித்த கூட்டத்திற்கு ஊடகவியலாளர்களை அனுமதிக்க மறுத்தமையானது வன்மையாக கண்டிக்கதக்க விடயம் என்பதுடன் அதற்கு கூட்டமைப்பு அரசியல் தலைமைகள் சில வாய்மூடி அமைதியாக இருந்தமை கண்டிக்கத்தக்கது.

குறிப்பாக பிரதியமைச்சர் அமீரலி அவர்கள் கடந்த முறை நடைபெற்ற கூட்டத்தின்போது மூன்று அதிகாரிகள் தங்களது கையடக்க தொலைபேசியின் ஊடாக அபிவிருத்தி குழு கூட்டத்தில் நடந்தவற்றை முகநூலில் ஊடாக நேரடியாக ஒளிபரப்பியதாகவும் .அதன்காரணமாக இன்றையதினம் ஊடகவியலாளர்கள் கூட்டத்தின் ஆரம்பத்தில் படம் எடுத்துவிட்டு முடிந்ததன் பின்னர் வந்து கேள்விகளை கேட்கும்போது பதில்கள் வழங்கப்படும் என தெரிவித்த போது.

அதனை கிழக்குமாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான யோகேஸ்வரன் ஆகியோர் கடுமையாக எதிர்க்க ஏனைய அரசியல்வாதிகள் அமீரலியின் கருத்தை ஆமோதிப்பதாக மௌனமாக இருந்தமையானது மாட்டத்தில் நடைபெறுகின்ற ஊழல் மோசடிகளை மறைத்து சரணாகதி அரசியல் நடத்தவே தமிழ் தலமைகள் விரும்புகின்றன என்பதை படம்போட்டு காட்டியுள்ளது.

மாவட்டத்தில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் ஊடக அடக்குமுறையை வேடிக்கை பார்க்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அராஜகத்தை அதிகாரத்தில் வைத்து அழகுபார்க்கின்றனர்.

குறிப்பாக பிரதியமைச்சர் அமீரலியின் தோலில் தட்டி ஊடகதர்மம் ஊடக ஒழுக்கம் பற்றி ஊடகவியலாளர்களுக்கு பாடம் எடுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறினேசன் ஐயா அவர்கள் கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறை குறித்து பாராளுமன்றம் வரை சென்று பேசியிருந்தார் ஆனால் இன்று ஊடகவியலாளர்களை அனுமதிக்க கூடாதென்பது இணைத்தலைமைகளின் முடிவு என்று அமீரலி கூறும்போது அதனை மறுக்காது ஊடக ஒழுக்கநெறி குறித்து பேசியுள்ளார்.

மட்டக்களப்பின் ஊடக ஒழுக்கநெறி எது!

சிறினேசன் ஐயா கூறவரும் ஊடக ஒழுக்க நெறி எது?

காத்தான்குடி கடற்கரையில் குப்பை கொட்டி கடற்கரையை நிறப்புகிறார்களே அதை ஊடகங்களில் போடக் கூடாது என்பதா?

அரச நிர்வாகத்தில் ஊழல் நடைபெறுகிறதே அதனை ஊடகங்கள் வெளியிடக் கூடாது என்பதா?

மாவட்டத்தில் சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பு நடைபெறுகிறதே அதனை ஊடகங்களில் வெளியிடக் கூடாது என்பதா?

தமிழர்களின் நிலங்கள் பறிபோகின்றதே அதனை ஊடகங்கள் வெளியிடக் கூடாது என்பதா?

கிழக்குப்பல்கலைகழகம் சிங்களமயமாக்கப்படுகின்றதே அதனை ஊடகங்கள் வெளியிடக் கூடாதென்பதா?

இனவாதத்திற்கு நீதிதுறையும் சட்டமும் துணைபோகின்றதே அதனை ஊடகங்கள் வெளியிடக் கூடாது என்பதா?

அரசாங்க அதிபர் ஊடகவியலாளர்களை அடக்கி தனக்கு சார்பாகத்தான் ஊடகவியலாளர்கள் எழுதவேண்டும் என்று கூறுகின்றாறே அதனை ஊடகங்களில் வெளியிட வேண்டாம் என்பதா?

ஊடகவியலாளர்களை அரசாங்க அதிபர் அச்சுறுத்தும் போது அதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேடிக்கை பார்க்கின்றதே அதனை விமர்சிக்க கூடாது என்பதா?


அல்லது ஒவ்வொரு ஊடகவியலாளரும் ஒவ்வொரு அரசியல் வாதிகளின் ஊதுகுழலாக செயற்படுகின்றார்களே அவர்களை போன்று செய்திகளை எழுதவேண்டும் என்பதையா ஊடக ஒழுக்கமென சொல்லவருகின்றீர்கள்.

ஊடக ஒழுக்கம் என்பது இலஞ்சம் சலுகை வரப்பிரசாதம் பதவி அதிகாரம் போன்ற வற்றிற்கு அடிபணியாது உண்மையை உண்மையாக பாதிக்கப்படும் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்காக எழுதுவதேயாகும்.


ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதை தடுத்து நிறுத்த முடியாத கூட்டமைப்பு அவர்களை அச்சுறுத்துபவர்களுடன் உறவு கொண்டாடுவது ஊடக அச்சுறுத்தலுக்கு கூட்டமைப்பு ஆதரவாக செயற்படுகின்றதா என்ற சந்தேகத்தை மாவட்டத்தில் ஏற்கனவே ஏற்படுத்தியிருந்த நிலையில் இன்றை சம்பவம் அதனை கட்டியங் கூறி நிற்கின்றது.

வெறுமனே படம் பிடிக்கவும் படம் காட்டவும் ஊடகம் இல்லை ஒரு சம்பவத்தை நேரில் கண்டு பகுப்பாய்வு செய்து மக்களுக்கு தேவையானதைஅறிக்கையிடுவதே ஊடகத்தின் பணி இதனை செய்யக்கூடாது என தடுப்பவர்கள் அனைவரும் சந்தேகக்கண் கொண்டு பார்க்கவேண்டியவர்களே

  

  

சம்பந்தனும்,மாவையும் துரோகிகள் தானே என்னைமட்டும் ஏன்கேள்வி கேட்கிறீர்கள்! ஜனா கேள்வி

Read More