புரிந்துணர்வுடன் செயற்பட்ட இயக்கங்களிடையே முரண்பாடு !கூட்டமைப்பின் உருவாக்கம்-3

( தயாளன் )

கூட்டமைப்பின் உருவாக்கம் எப்படி நிகழ்ந்தது ( 3)

முதல் தெரிவு டெலோ.
திரு . சிவராமிடம் ஒப்படைக்கப்பட்ட பணியைச் சாத்தியமாக்க முதல் தெரிவாகத்தெரிந்தது. தமிழீழ விடுதலை இயக்கமே. ஏனெனில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் அதிகளவு புரிந்துணர்வுடன் செயற்பட்டவை   புலிகளும் ,டெலோவுமே.

இந்தத் தமிழீழ விடுதலை இயக்கம் என்ற பெயரில் உரும்பிராயைச் சேர்ந்த முத்துக்குமாரசாமியே ஒரு இயக்கத்தை ஆரம்பித்தார். தங்கத்துரை, குட்டிமணியின் இயக்கத்துக்குப் பெயரிடப்படவில்லை. தங்களால் இந்தப்போராட்டத்துக்கு எதனைச் செய்ய முடியுமோ அதனை மட்டுமே செய்வோம். கட்டுப்பாடுகளுடன் ஒரு இயக்கத்தை நடத்திச் செல்வது மிகக் கடினமான காரியமாக இருக்கும் என அவர்கள் ஆரம்பத்தில் கருதினர். அதனால் தான் " தமிழீழ விடுதலைப் புலிகள் " என்ற பெயரில் உரிமைகோரும் சம்பவங்களைப் பட்டியலிடும் போது அவர்கள் தாங்கள் பங்குபற்றிய, மேற்கொண்ட சம்பவங்களுக்கு உரிமை கோர முற்படவில்லை.    
முத்துக் குமாரசாமியினால் அகிம்சை ரீதியிலோ, ஆயுதப்போராட்ட வழியிலோ தொடர்ந்து தனது இயக்கத்தை நடத்த முடியவில்லை.எனவே தங்கத்துரை அவர்கள் தமது இயக்கத்துக்கு இந்தப்பெயரை  வைத்த போது சிறிது முணுமுணுக்கத்தான் முடிந்தது. திரு.முத்துக் குமாரசாமி தற்போது வெளிநாடொன்றில் புலம்பெயர்ந்த நிலையில் வாழ்ந்து வருகிறார்.   
   
தம்பி என்ற பெயர்.
திரு . தங்கத்துரை அவர்கள் மீது பிரபாகரனுக்கு அளவு கடந்த மதிப்பு இருந்தது. அது போன்றே பிரபாகரன் மீது மிகுந்த அன்பு கொண்டவராகத் தங்கத்துரை இருந்தார். அவரைத் `தம்பி` என்று அழைத்தார். போராளிகள் அவரை  `அண்ணா ` என்றும் " செஞ் சோலை  - காந்தரூபன் " பிள்ளைகள் மாமா எனவும்,  தேசியத் தலைவர் என்று  தமிழ் மக்களும்  அழைக்கும் வரை இந்தப் பெயரையே,போராளிகள் அனைவரும் பெரும்பாலும் பயன்படுத்தினார். அவரைவிட வயதில் குறைந்த சீலன் , புலேந்திரன் , சங்கர் , கிட்டு, போன்றோரும் தங்கத்துரை அழைத்தது போலவே அழைத்தனர். எல்லோரும் தங்களுக்கு ஏற்படும் வலிகளின் போதும், நினைவு தப்பும் வேளை அரற்றும் போதும் `அம்மா `  என்றே அழைப்பர். ஆனால் சங்கர் இவ்வாறான இரு வேளைகளிலும் திரு .தங்கத்துரை அழைத்த மாதிரியே அரற்றினார். அந்தப் பெயர் மட்டுமல்ல பிரபாகரனும் போராளிகளின் மனதில் எந்தளவு ஈர்ப்பைப் பெற்றிருந்தார். என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு உதாரணம்.       
சிறிது காலம் இரு இயக்கங்களும் ஒன்றாகவே இணைந்து பயணித்தன. நீர் வேலி வங்கிக் கொள்ளை என்ற துணிகரமான சம்பவத்தை இரு இயக்கங்களும் இணைந்தே செய்தன.   
கிருஷ்ணா வைகுந்தவாசன் செய்த தமிழீழப் பிரகடனம் சாத்தியமற்றது. என்பதை விளக்கும் " நாடு கடத்தப்பட்ட நிலையில் தமிழீழ அரசு" என்ற அறிக்கையும், இயக்கத்துக்குச் சொந்தமான ஆயுதத்தையும் சில உடமைகளையும் கொண்டு சென்று உமா மகேஸ்வரனுடன் இணைந்து கொண்ட சுந்தரத்துக்கு  விதிக்கப்பட்ட தண்டனை குறித்து " துரோகத்துக்கு பரிசு " என்ற அறிக்கையும் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற இலச்சினையுடன் துண்டுப் பிரசுரங்களாக வெளியிடப்பட்டதும். இக்காலகட்டத்தில் தான்.  இந்தத் துண்டுப் பிரசுரங்களை மக்கள் மத்தியில் விநியோகித்தவர் அப்போது புலிகளின் தீவிர ஆதரவாளராக பொட்டம்மான்.    
  பிரியும் முடிவு,
வடமராட்சி கிழக்கில் எதிர் பாராத வகையில் கைதான குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் போன்றோர் கொழும்பில் உள்ள உயர் நீதி மன்றத்துக்குத் கொண்டு செல்லப்பட்டு வந்தனர். இவ்வாறான நிலையில் நாங்கள் தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டு அவர்களை மீட்போம் என்று வலியுறுத்தினார் பிரபாகரன். ஆனால் தங்கத்துரை அவர்களின் இயக்கத்திலிருந்த ராசப்பிள்ளை, சிறிசபாரத்தினம் போன்றோர் இம் முயற்சியில் ஈடுபட ஆர்வம் காட்டவில்லை. அவ்வேளையில் தான் தங்கத்துரை அண்ணா இல்லாத இந்த இயக்கத்தினருடன் தொடர்ந்து இணைந்து செயற்பட முடியாது என பிரபாகரன் மனதில் தோன்றியது.  
    
   தொடர்ந்து மேலும் சில சம்பவங்கள் நிகழவே தனித்து இயங்குவதென்ற தமது முடிவை செயலாக்கினார். ஒன்றாக இருந்து பிரச்சினை ப் படுவதை விட நாங்கள் தனித்தனியாகப் பிரிந்து நண்பர்களாக இருப்போம் என அவர்களிடம் விளக்கினார் பிரபாகரன்.  

இச் சம்பவத்தில் அவர் செய்த விட்டுக்கொடுப்புக்கள் பற்றி விபரிப்பதானால் அதற்கென தனியே ஒரு கட்டுரையோ, புத்தகமோ தான் வெளியிடவேண்டும். அதேவேளை பிரபாகரனின் தனிப்பட்ட பாதுகாப்பு குறித்து  ராசப்பிள்ளை போன்றோர் நிறையவே கவலைப்பட்டனர். இதற்கென அவர்கள் முன்வைத்த ஏற்பாடுகள் மற்றும் சில விடயங்களைப்  பிரபாகரன் அன்புடன் மறுதலித்தார். மீண்டும் தனித்து இயங்கும் போது சில பொருளாதார மற்றும் நிதி ரீதியான நெருக்கடிகள் தோன்றின. அதனை பிரபாகரனுக்கு அடுத்த நிலையில் இருந்தவரும் பிற்காலத்தில் இளங்குமரன் என அழைக்கப்பட்ட வருமான பேபி அண்ணா சமாளித்தார்.

குட்டிமணியை ஒப்படைத்த கருணாநிதி .
இக் காலகட்டத்தில் தமிழகத்தில் சில சம்பவங்கள் நிகழ்ந்தன. எம் .ஜி .ஆரை மலையாளி என வர்ணித்தார். கருணாநிதி. அவர் மலையாளி என்பதால் தான் ஈழத் தமிழர் விடயத்தில் போதிய அக்கறை காட்டுவதில்லை என்று கருணாநிதி சொன்னதும் பொறுமையிழந்து விட்டார் எம் .ஜி .ஆர். காரமான பதில் கிடைத்தது அவரிடமிருந்து. " தமிழகத்தில் கைதான குட்டிமணியை சிறிலங்கா பொலிசாரிடம் தனது ஆட்சிக்காலத்தில் கையளித்தவர் தானே  கருணாநிதி“ என்று எம் .ஜி .ஆர் சொன்னதும் வெலவெலத்து விட்டார் கருணாநிதி.    
    
அக் காலத்தில் குட்டிமணி பற்றிய செய்திகள் அடிக்கடி வெளிவந்து கொண்டிருந்தன பிற்காலத்தில் மடுப்பகுதியில் புலிகளால் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரி பஸ்தியாம் பிள்ளை யிடம் தான் குட்டிமணியை கருணாநிதி ஒப்படைத்திருந்தார்.  
    உடனடியாக குட்டிமணியின் இயக்கத்தினரைத் தேடிப்பிடிக்க உத்தரவு விட்டார் கருணாநிதி. தனது கட்சி நிர்வாகிகளிடம். ராசப்பிள்ளை, சிறிசபாரெத்தினம்.ஒப்ரோய் தேவன், (பெரிய வறுவா) சின்னவறுவா , சுதா, ரமேஷ் (சாரதி ) ரூபன் , முரளி உட்பட 10  பேர் மட்டுமே தமிழகத்தில் இருந்தனர். தற்போதைய பாராளுமன்றக்குழுக்களின் பிரதித்தலைவர் செல்வம் அடைக்கலநாதனும், மற்றொரு உறுப்பினரும் நாட்டில் இருந்தனர். இவ்வளவு பேரும்தான் டெலோவின் முழுநேர உறுப்பினகள். பத்துப்பேரை மட்டுமே கொண்ட ஒரு இயக்கத்தை அதுவும் எம் .ஜி .ஆர் கட்சியினருடன் தொடர்பில்லாதவர்களோடு தொடர்பு கொண்டமை கருணாநிதியின் திறமைதான். அந்தச் சந்திப்பு , பேசப்பட்ட விடயங்கள், ஏனைய விவகாரங்கள் குறித்து  டெலோ இயக்கத்திலிருந்து விலகி நாட்டுக்கு வெளியே இருப்பவர்களுக்குத்தான் தெரியும் .  
       
கருணாநிதியைக் காப்பாற்றிய சிறி.  
சில தினங்களின் பின் ஒரு அறிக்கை வெளியானது அதில்  "குட்டிமணி வேறொரு குற்றச்சாட்டின் பேரிலேயே கைதாயிருந்தார். அவர் ஒரு போராளி என்பது அப்போது முதல்வராக இருந்த மு . கருணாநிதிக்குத் தெரியாது. அதனால் தான் சிறிலங்கா அரசு கேட்டதும் அவரை ஒப்படைத்தார் கருணாநிதி ". என்று  குறிப்பிடப்பட்டிருந்தது. கீழே சிறிசபாரத்தினம்- செயலதிபர், தமிழீழ விடுதலை இயக்கம்எனக் காணப்பட்டது.  
 
சிறி சபாரத்தினத்தின் கையொப்பம் குட்டிமணி, தங்கத்துரையின் இயக்கத்தின் பெயர் இதுதான் என உலகத்துக்குத் தெரியப்படுத்தியது. அது வரை எந்த இடத்திலும் இந்தப் பெயர் பயன்படுத்தப்படவில்லை, தன்னைப் பெரும் இக் கட்டிலிருந்து காப்பாற்றிய டெலோ இயக்கத்தவர் மீது கருணாநிதிக்கு ஒரு பிடிப்பு ஏற்பட்டது .எம் .ஜி .ஆருடனான சந்திப்புக்கு முதல் நாள் தன்னைச் சந்திக்கு மாறு பிரபாகரனை வேண்டியிருந்தார் கருணாநிதி. அவரது சித்து விளையாட்டு பிரபாகரனுக்குப் புரிந்து விட்டது. முதல்வருடனான சந்திப்பு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட விடயம். எனவே அதன் பின் கருணாநிதிக்கு வசதியான நாளில் சந்திக்கலாம் என புலிகள் தரப்பில் பதிலளிக்கப் பட்டது. ஈழத் தமிழ் இயக்கங்களுக்கென உண்டியல் குலுக்கி ஒரு லட்சம் ரூபாவைக் கருணாநிதி சேகரித்தார் . அதை டெலோ, புலிகள் , ஈ .பி .ஆர் .எல் . எப்  ஈரோஸ் ஆகிய நான்கு இயக்கங்களுக்கும் பகிர்ந்தளிக்கத் தீர்மானித்திருந்தார் . தான் குறிப்பிட்ட நாளில் புலிகள் சந்திக்காததால் அவர்களுக்கென ஒதுக்கியிருந்த இருபத்தையாயிரத்தையும் டெலோவுக்கே வழங்கினார். ஈரோஸ் , ஈ .பி .ஆர் .எல் எப் என்பன தலா       இருபத்தையாயிரத்தை வாங்கித் செல்ல டெலோ ஐம்ப தாயிரம்  ரூபாவுடன் சென்றது . இதன் மூலம் தனது முதல் தெரிவு டெலோதான் என உணர்த்தினார் கருணாநிதி.     
       ( கருணாநிதி சிறையில் இருந்த போது எழுதிய பாலைவன ரோஜாக்கள் திரைப்படத்தில் ஒரு பாத்திரத்துக்கு சபாரத்தினம் எனப் பெயரிட்டார் . சிறி சபாரெத்தினத்தின்  மறைவின் பின் எழுதப்பட்ட இத் திரைப்படத்தில் சத்தியராஜ் ,  பிரபு போன்றோர் நடித்தனர் .)   
 
குணத்துக்கு புலிகளின் சயனைட்.
நாட்டில் இரு இயக்கங்களும் தனித்தனியே இயங்கினாலும் இந்திய அரசினதும், தி.மு.க வினதும் ஆதரவு தமக்கே உண்டு என்ற இறுமாப்பு டெலோ இயக்கத்தினரிடம் இருந்தது. ஆனால் திருமலை, மட்டக்களப்பில் இது குறைவு . மட்டக்களப்பில் நல்ல புரிந்துணர்வு இருந்தது . என்றே சொல்லலாம். அங்கு புளியந்தீவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கைக்கு புலிகளுக்கு  டெலோவினர் படகு கொடுத்து உதவினர். ஒரு நடவடிக்கைக்கு புலிகள்  இயக்கத்தினரிடம் ஆயுதம் கேட்டனர் டெலோவினர் . " உங்களது முடிவில் எமக்கு உடன்பாடில்லை .ஒரு காலத்தில் நாங்கள் ஒன்றாகச் செயற்பட்டவர்கள் என்ற வகையில் எங்களது உறுப்பினர் ஒருவரிடம் துப்பாக்கியைக் கொடுக்கிறோம். அவர் சம்பவம் நடக்கப்  போகுமிடத்தில் வைத்து அதைத் தருவார். உங்களது வேலை முடிந்ததும் அவரிடம் அதைத் திரும்பத் கொடுத்துவிட வேண்டும். இதுவும் தற் துணிவின் பெயராலும் நட்பின் பேராலும் தான் தருகிறோம் "  என மட்டக்களப்பின் அப்போதைய தலைமை தெரிவித்தது . அப்படியே அவர்களும் நடந்து கொண்டனர். அப்போதைய புலிகளது மட்டக்களப்பின் தலைமையை சிறி சபாரத்தினத்திற்குத் தெரியும். புலிகளுடன் சேர்ந்து நீங்கள் எதாவது நடவடிக்கையில் ஈடு படலாம் என சிறி சபாரத்தினம் தமக்கு அனுமதி வழங்கியதாக டெலோவினர் ஏற்கனவே தெரிவித்திருந்தனர் .   

குறிப்பாக ஆரையம்பதியில் இருந்த டெலோ போராளி குணம் என்பவர் புலிகளிடமிருந்து சயனைட் ஒன்றைப் பெற்றிருந்தார். ஒரு சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது தப்ப முடியாத நிலையில் ஆரையம்பதி முருகன் கோயிலுக்குள் வைத்து அதனை அருந்தி உயிர் நீத்தார்.   
 நிர்மலா நித்தியானந்தன் மட்டு சிறையிலிருந்து மீட்கப்பட்டு ஆரையம்பதிக்கே முதலில் கொண்டு வரப்பட்டிருந்தார். அன்று கண்ணகை அம்மன் சடங்கு. இந்த அமளிக்குள் இவரை இங்கு கொண்டு வந்து விட்டோமே என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருந்த போது தானும் புலிகளில் இணையப் போகிறேன் என்றார் . குணம் . ஆரையம்பதியில் இருந்த பிரதேசப் பொறுப்பாளர் மூலம் குணத்தைப் பற்றி ஏற்கனவே புலிகளுக்குத் தெரிந்திருந்தது . எனவே அவரை தமது இயக்கத்தில் சேர்க்க முடியாததற்கான காரணங்களை வெளிப்படையாகத் தெரிவித்தனர். புலிகள். " நீங்கள் வேறு எந்த இயக்கத்திலும் சேருவது பற்றி எமக்கு ஆட்சேபனை இல்லை . நாங்கள் உங்களுடன் நட்பாக இருப்போம்" எனவும் கூறினர்.
 ஒரு தடவை ஆரையம்பதி முற்றுகை யிடப்பட்ட போது புலிகளின் அப்போதைய மட்டக்களப்புத் தலைமையைத் துவிச்சக்கரவண்டியில் ஏற்றிக்கொண்டு காத்தான்குடிக்குள் கொண்டு போய் காப்பாற்றியவர் குணம்.
 
 வடிகட்டிய பொய்.
ஆனால் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜனா ( கோவிந்தம் கருணாகரன் ) சுதுமலை முற்றுகையின் போது புலிகளுக்கு எவ்வித இழப்புமில்லாமல் கிட்டுவைக் காப்பாற்றியது தானே எனச் சொல்வது வடிகட்டிய பொய். அந்த முற்றுகையில் தான் புலிகளின் முதலாவது மேஜர் அல்பேட் (கந்தையா ரூபநிதி) வீரச் சாவடைந்திருந்தார் . இந்த விடயமே தெரியாமல் தான் ஜனா புழுகியிருக்கிறார்.    
     இன்று தாமே கூட்டமைப்பின் உருவாக்கத்துக்கு காரணம் எனப் புரளி கிளப்பும் ஊடகவியலாளர்கள் ஜனாவின் இந்தப் புளுகை நம்பி புலிகளை மட்டந்தட்ட முனைந்தனர். இந்த விடயம் இணையத்தில் வெளியாகி 24. மணி நேரத்துக்குள்  உண்மையை  அருணன் என்பவர் உண்மை நிலையை  வெளியிட்டிருந்தார் .

  (அருணன் என்பவர் உண்மை நிலை இணைப்பு) 

அழுத்தவும்

கதாநாயகன் வேஷத்திற்கு ஆசைப்படும் கோமாளி ஜனா.

( டெலோவிடனான மோதல் எப்படி நடந்தது என்பது பற்றி அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம் .)  

கூட்டமைப்பின் உருவாக்கம் எப்படி நிகழ்ந்தது (2)

கூட்டமைப்பின் உருவாக்கம் எப்படி நிகழ்ந்தது ! (அங்கம்:1)

பம்பாயில் தமிழரை விரட்டிய சிவசேனாவுக்கு எமது மண்ணில் செங்கம்பள வரவேற்பு!

Read More