பசீர்-முரளி கைது,புலிகள்-டெலோ மோதலுக்கு வித்திட்டது.கூட்டமைப்பின் உருவாக்கம்(4)

பசீர் -  முரளி புலி உறுப்பினர்கள்  கைது
புலிகள் - டெலோ  மோதலுக்கு வித்திட்டது.

 

(தயாளன்)

கூட்டமைப்பின் உருவாக்கம் எப்படி நிகழ்ந்தது ( 4)
 

தப்புச் செய்தது சிறியண்ணா ! ராசிப்பழி எனது மனைவி மீதா .
விசனமடைந்த  புலி உறுப்பினர்.
 
யாழ்ப்பாணத்தில் மருதனார் மடம், நெல்லியடி போன்ற இடங்களில் சிறு சிறு சச்சரவுகள் புலிகள் - டெலோவினரிடையே நிகழ்ந்தன. ஆயினும் பாரியளவு பாதிப்பை ஏற்படாத வகையில் இரு தலைமைகளும் தங்கள் உறுப்பினர்களைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தன. 1986 ஏப்ரல் 29 அரியாலைப் பகுதியில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த இவ்விரு இயக்க உறுப்பினர்களிடமும் முரண்பாடு ஏற்பட்டது . புலிகள் இயக்க உறுப்பினர்களை டெலோ உறுப்பினர்கள் தாக்கினர். எனவே தாக்கப்பட்ட உறுப்பினர்கள் அரியாலையில் இருந்த நடா முகாமுக்கு தொலைத் தொடர்பு மூலம்  விடயத்தைத்  தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்தார் பொறுப்பாளர் நடா. புலிகளைத் தாக்கிய டெலோ உறுப்பினர்கள் துவிச்சக்கர வண்டியில் வந்துகொண்டிருப்பதைக் கண்டதும் அவர்களைப்  பிடித்தார். அடிக்கவும் செய்தார்.இதனால் புலிகளுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டுமென டெலோவினர் முடிவெடுத்தனர்.

அப்போது தமது கோட்டையாக  அவர்கள் கருதிக்கொண்ட கல்வியங்காட்டில்  புலிகள் யாராவது  அகப்பட்டாலும் பிடிப்பதெனத் திரிந்தனர். சரா என்ற புலி உறுப்பினரைக் கண்டதும் அவரைப் பிடிக்கலாமென நோட்டமிட்டனர். ஆனால் கிட்டே வந்து பார்க்க முடியவில்லை.  ஏற்கனவே ஒரு பிரச்சினையில் சரா கூட்டமாக வந்த ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்களைத் தனது துணிச்சல் மூலம் மிரட்டியனுப்பிய சம்பவம் இவர்களுக்குத் தெரியும். சராவும் கல்வியங்காட்டைச் சேர்ந்தவர்தான். ஜெர்மனியிலிருந்து இயக்கத்தில் இணைவதற்காக இந்தியாவுக்கு வந்தவர். மூன்றாவது முகாமில் பயிற்சி பெற்றவர். சராவை  நெருங்க முடியாததற்கு இன்னொரு காரணம் அந்தப் பகுதியில் இருந்த மக்கள் அவரது உறவினர்கள் என்பது.  அங்கு  ஏதோ விபரீதம் நிகழப் போகிறது என்பது பலருக்கும் புரிந்து விட்டது. சராவை பத்திரமாக ஒரு வீட்டுக்குள் அழைத்துச் சென்றனர்.  

பேச்சுக்கு அழைப்பு
கல்வியங்காடு  பழம் வீதியில் இருபாலைக்கு அண்மித்ததாக புலிகளின் புகைப்படப்பிரிவின் வேலைகள் நடைபெறும் இடம் இருந்தது. அங்கு  சந்துரு  என்றொரு உறுப்பினர் செல்லவேண்டியிருந்தது. இந்தியாவிலிருந்து படகில் திரும்பிக்கொண்டிருந்த புலிகளின் படகு மீது ஸ்ரீலங்கா கடற்படையினர் தாக்குதல் நடத்தினர்.அப்படகில் அப்போதைய மட்டக்களப்பு பொறுப்பாளராக விளங்கியவரும் இருந்தார். இத் தாக்குதலில் அனைவரும் வீரச்சாவடைந்து விட்டதாகக் கருதப்பட்டது. இவர்கள் அனைவரது புகைப்படங்களையும்        வீரவணக்கத்துக்காக வைக்க வேண்டியிருந்தது .
தட்டா தெருச் சந்திக்கு அண்மையிலிருந்த புலிகளின் தலைமைப் பணிமனையிலிருந்து புகைப்படப்பிரிவின் இடத்துக்கு சந்துருவைக் கூட்டிக்கொண்டு செல்லுமாறு அப்போது அங்கே வந்த பசீர் என்னும் உறுப்பினர் கோரப்பட்டார்.  
மோட்டார் சைக்கிளில் சென்ற பசீரையும், சந்துருவையும் கல்வியங்காடு ஞானபாஸ்கரோதயா சனசமூக நிலையத்துக்கு அப்பால் நித்தி என்ற டெலோ உறுப்பினரும் இன்னுமொருவரும் வழிமறித்தனர். அவர்களுக்குப்  பசீரைத் தெரியாது . சந்துரு புலிகள் இயக்க உறுப்பினர்  எனத் தெரியும். " நீங்கள் டைகேர்ஸ் தானே? " என்று கேட்டார் நித்தி " ஓம் "  எனப் பதிலளித்தார் பசீர். " உங்கட ஆக்கள் எங்கட ஆக்களுக்கு அடிச்சிப்போட்டினம். அதைப்பற்றிக் கொஞ்சம் கதைக்க  வேணும் .  உள்ளுக்குள்ள வாங்கோ " என்று தமது முகாமொன்றைக் காட்டினார். அதற்கு " பிரச்சினைகள் பற்றிக் கதைக்க வேணுமெண்டா அதுக்குத் திலீபன் தான் வரவேணும். நான் போய்த் திலீபனுக்குச் சொல்லுறன். நீங்கள் அவரோட கதைச்சு முடிவு காணுங்கோ "  எனத் தெரிவித்தார் பசீர். " நாங்கள் திலீபனுக்குச்  சொல்லுறம். அவரும் வரட்டும். முதல்ல  நீங்கள் உள்ளுக்கு  வாங்கோ " என்ற நித்தியின் குரலில் ஒரு கண்டிப்புத் தெரிந்தது.
அங்கிருந்து தப்ப வழி இல்லை.  இருவரும் உள்ளே போனால் கிட்டுவுக்குத் தகவல் தெரிவிக்க முடியாது.  சந்துரு இளைய  உறுப்பினர். அவரை இங்கே விட்டு தானும் போக முடியாது. எதாவது விபரீதம் நிகழ்ந்தால் அந்தப் பழி தன்னில் வந்துவிடும்.எனவே தான் அங்கே நின்று கொண்டு சந்துருவை விடுவிக்கவும் கிட்டுக்குத் தகவல் அனுப்பவும் உள்ள வழி பற்றி உடனடியாக முடிவெடுத்தார் பசீர்.   " சரி பிரச்சினை இல்லை ; நான்  உள்ளுக்க வாறன்; ஆனா என்னோட வந்தவருக்கு  முக்கியமான வேலை இருக்கு அவர் போகட்டும் என்ன " என்று சொல்லிவிட்டு அவர்கள் அவர்களின்  பதிலை எதிர்பாராமலே   சந்துருவிடம் மோட்டார் சைக்கிளைக்  கையளித்தார் பசீர்.

சந்துருவின் சாமர்த்தியம்   !
அவர் குறிப்பால் தனக்கு உணர்த்தியதைக்  கச்சிதமாகப் புரிந்து கொண்டார் சந்துரு. புகைப்படப் பிரிவுக்குப் போவது போல போன வழியில் அப்படியே போய் இராசபாதை வழியாக கிட்டுவின் முகாமுக்கு விரைந்தார். அவர் வந்த வழியில் திரும்பிச் செல்ல முனைந்திருந்தால் நிலைமை பாதகமாக முடிந்திருக்கும். அவரையும் தடுத்திருப்பார்கள்.
  சந்துரு வேகமாகச் சென்றதும் தான் நித்திக்கு நிலைமை புரிந்தது. தான் அவரைப் போக விட்டிருக்க கூடாது என உணர்ந்தார்.இதே வேளை பசீர் "சிறியண்ணையிட்டச் சொல்லுங்கோ பசீர் வந்திருக்கிறனெண்டு.  அவருக்கு என்னைத் தெரியும்" என்றார். உடனே இருவரை சிறி சபாரத்தினத்திடம் அனுப்பிய நித்தி " நாங்கள் வேற ஒரு இடத்தில இருந்து  கதைப்பம் வாங்கோ " எனக் கூறி ஞானபாஸ்கரோதயா நிலையத்துக்கு முன்னால் பருத்தித்துறை வீதியில் போய் முடியும் இடத்திலுள்ள மற்றொரு டெலோ முகாமுக்கு பசீரை அழைத்து சென்றார்.பசீர் நம்பிக்கையோடு அங்கு சென்றார்.  
     புதிய உறுப்பினர்களிடையே புரிந்துணர்வு இல்லாமல் இருக்கலாம்.ஆனால் ஒன்றாக ஒரே இடத்தில் தங்கியிருந்து சாப்பிட்டு, படுத்துறங்கி நட்பாகப் பழகிய சிறி பழைய நட்புக்கு மதிப்புக் கொடுப்பார் என பசீர் நினைத்தார்.   
ஏனெனில் கடந்த ஆறு நாட்களுக்கு முன்னதாகத்தான் அவரது திருமண வைபவம் நிகழ்ந்தது.புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களுக்கு நடைபெறும் இரண்டாவது திருமணம் இது.  ஏற்கெனவே  பிரபாகரனின் திருமணம் தமிழகத்தில்  நிகழ்ந்தது.
நாட்டில் நடைபெறும் திருமண என்ற வகையில் முக்கியமான இயக்கங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார் பசீர் . தன்னுடன் நன்றாக பழகியவர் என்ற வகையில் சிறியரை நேரடியாக அழைக்கக் கட்டைப் பிராயிலுள்ள முகாமொன்றுக்குச் சென்றிருந்தார். அவருடன் கூடவே சிறியரின்  ஒன்றுவிட்ட சகோதரனும் போயிருந்தார். அப்போது சிறியர் அங்கு இருக்க வில்லை. முகாமில் இருந்தவர்களிடம் விபரத்தைச் சொல்லிவிட்டு வந்தனர் இருவரும். அன்று பிற்பகல் தனது ஒன்றுவிட்ட சகோதரனைச் சந்தித்த சிறியர் திருமண அழைப்பு தனக்குக் கிடைத்ததாகவும் தான் கட்டாயம் அதில் கலந்து  கொள்ளப்போவதாகவும்  தெரிவித்திருந்தார். ஆனால் என்ன முக்கிய வேலையோ அவரால் கலந்து கொள்ள முடியாமற் போயிருந்தது. எனவே  இப்படியான சந்தர்ப்பத்தில் அவர் தன்னை அழைத்து உரையாடுவார் அல்லது தானிருக்கும் இடத்துக்கு வந்து சந்திப்பார்  எனக் காத்திருந்தார் பசீர் .
 இதேவேளை  சந்துரு கிட்டுவின் முகாமுக்குச் சென்ற போது அங்கே ஒரே அமளி - கல்வியங்காடு பிரதேசப் பொறுப்பாளர் முரளியை டெலோவினர் கடத்தி விட்டதாகப் பரபரப்பாக பேசிக்கொண்டிருந்தனர்.   எந்த நிலைக்கும் ஆயத்தமாகப் புறப்படும் நிலையில் அவர்கள் இருந்தனர்.
சீற்றமுற்ற கிட்டு
கிட்டுவிடம் போன சந்துரு  " காக்காண்ணையை டெலோ புடிச்சிட்டாங்கள்" என்று சொன்னதும் கோபத்தின் உச்சிக்கே போய் விட்டார் அவர். ஏனெனில் பசீரின் திருமண ஏற்பாடு குறித்து பிரபாகரனிடம் பேசி அனுமதி வாங்கியவர் அவர்.  சகல விடயங்களையும் (புகைப்படம் முதலானவை ) அவரே ஒழுங்கு படுத்தியவர் இந்தத் திருமணத்தில் ஒரு சாட்சியாகவும் .கையொப்பமிட்டவர். எனவே இனித் தாமதிக்க நேரமில்லை என முடிவெடுத்தார். ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் டெலோவினருடன் தொடர்பு கொள்ள முடிவெடுத்தார். அந்தப் பதட்டமான சூழலிலும் தொடர்பு கொள்பவர் பொருத்தமான ஆளாக இருக்குமாறு பார்த்துக்கொண்டார்.
கட்டைப் பிராய்க்கு அனுப்பிய அணியினரிடம் அரை மணி நேரத்துக்குள் பசீர், முரளி  இருவரையும் விடுதலை செய்யாவிட்டால் நேரடியாக மோதுவோம் என எச்சரிக்கை விடுக்குமாறு உத்தரவிடப் பட்டிருந்தது.
இதே வேளை யாராவது ஆயுதங்களுடன் வந்தால் சுடுமாறு அங்குள்ள ஒரு  மாடி வீட்டில் நின்ற தமது உறுப்பினர்களுக்கு டெலோவினர் உத்தரவிட்டிருந்தனர்.      
இதெல்லாம் தெரியாமல் சிறி சபாரத்தினத்திடம் சென்றவர்கள் வரும் வரை காத்துக்கொண்டிருந்தார் பசீர். அவர்கள் இருவரும் வந்ததும் அந்த முகாமுக்குப் பொறுப்பானவரைக் கூப்பிட்டு எதோ சொன்னார்கள். இதனைத் தொடர்ந்து டெலோ உறுப்பினர் கமல் என்பவர் பிரசுரிக்க முடியாத `செந்தமிழில்` தனது அதிகாரத்தைக் காட்ட முனைந்தார்.   அதுவரை "எனக்கு யாழ்ப்பாணத்தில் நடந்த விடயங்கள் தெரியாது. திருமணம் முடிப்பதற்காக இங்கு வந்து சில நாட்கள் தான் ஆகிறது " என்று பசீர் சொல்லிக்கொண்டிருந்தார். கமலின் விசாரணைத் தொனி மாற்றமடைந்தது. அடிகளும் விழத்தொடங்கின.   
அதுவரை சிறி சபாரத்தினம் மீது பசீர் கொண்டிருந்த நம்பிக்கை ஒரேயடியாகச் சரிந்து விழுந்தது . ஒன்றாகச் சாப்பிட்டு உரையாடிய அந்த நாட்கள் நினைவுக்கு வந்தன. அந்த நேரத்தில் " வந்திட்டாங்கள் " என்று கூறியபடி ஒருவர் . ஓடி வந்தார்  .தொடர்ந்து உத்தரவுகள் தூள் பறந்தன  "நான் சொல்லும் வரை ஒருவரும் சுடக்  கூடாது " என பொறுப்பாளர் கட்டளை இட்டார் .
எங்கெங்கே நிலையெடுக்க வேண்டுமென அவரது வாய் உத்தரவு விட்டுக்கொண்டிருந்தது. அவ்வேளையில் ஒரு அறையிலிருந்து முரளி இழுத்து வரப்பட்டார் . முரளி - பசீர்  இருவருக்கும் ஒருவரை ஒருவர் பார்த்ததில் அதிர்ச்சி. இருவருக்கும் மற்றவர் பிடிபட்டது அதுவரை தெரியவில்லை.  திடீரெனக்  கொஞ்சத் தூரத்தில்   துப்பாக்கி வேட்டுச்   சத்தங்கள் கேட்டன. அவ்வளவுதான் நிலையெடுத்திருந்தவர்களைக்  காணவில்லை. " இவங்கள்  ரெண்டு  பேரையும் போட்டால் சரிவரும் " என்று சொல்லிவிட்டு முரளியை பசீர் நிற்கும் பக்கம் இழுத்துக்கொண்டு வந்தார் ஒருவர்- அப்போது வேறொருவர் " வேண்டாம் ! இவங்களை வச்சுத் தப்புவோம்" என்றார். அதை மற்றவர்களும் ஏற்றுக்கொண்டது போல் தெரிந்தது .
பிழையான நேரத்தில் பிழையான முடிவை எடுத்து விட்டது டெலோ .  ஓரிரு நாட்களில் பருத்தித்துறை இராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தனர் புலிகள். மன்னார் - வன்னியிலிருந்து ஏறத்தாழ எல்லாப் புலிகளும் இத் தாக்குதலுக்காக யாழ்ப்பாணம் வந்திருந்த வேளையில் தான் புலிகளுக்கு பாடம் படிப்பிக்க வேண்டுமென்று முடிவெடுத்து விட்டனர் டெலோவினர் . இந்நிலையில் புலிகளின் சகல அணிகளும் கல்வியங்காட்டை முற்றுகையிட்டன அப்போதுதான் நிலைமையின் விபரீதம் புரிந்தது டெலோவினருக்கு. பசீரையும் , முரளியையும் இழுத்துக்கொண்டு ஒவ்வொரு வீடாக த்திரிந்தனர். இடைஇடையே அடியும் விழுந்தது அவர்களுக்கு. " அவங்களை விடுங்கோடா " என்று சத்தமிட்டபடி சராவின் சகோதரிகள் பின்னால் ஓடி வந்தனர்.அவர்களை நோக்கியும் `செந்தமிழால்` வீரம் காட்டினர் சிலர். முற்றுகை மெல்ல மெல்ல இறுகியது. இனி தப்புவது கடினம் என்ற நிலைமை அவர்களுக்கு  
         " தமிழீழம்  எண்டது சாத்தியமில்லை - ஏலுமானவரைக்கும் இவங்களோட  அடிபடுவம் " என்று அச்சமயத்தில் சிறி சபாரத்தினம் கூறியதாக  பின்னர் ஒரு சமயம் டெலோ உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார். எந்த இயக்கமாக இருந்தாலும் தமிழீழம் என்ற கனவுடனேயே தொடர்பு கிடைத்த இயக்கங்களில் இணைந்து கொண்டனர் அப்போதைய இளைஞர்கள்.
" தமிழீழம் சாத்தியமில்லை " என்று சொன்னதும் இயல்பாகவே எதிர்த்துப் போராடும் குணம் அவர்களை விட்டுப் போய்விடும் என்று கணிக்கத் தவறிவிட்டார் சிறி சபாரத்தினம்.
தம்மைத் தடுத்து வைத்திருந்த டெலோ  உறுப்பினர்களிடம் " இந்தச் சண்டையை நிறுத்த எங்களால முடியும். எங்கள் இரண்டுபேரையும் பொதுமக்களோடு விடுங்கோ. நாங்கள் போய் சொன்னால் கிட்டு சண்டை நிற்பாட்டுவார்.நேரம்போனால்  பாரிய உயிரிழப்பு ஏற்படும் எனக் கூறினார் பசீர்.
மட்டக்களப்பில் புளொட் - ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் ஈரோஸ் -புளொட்   இயக்கங்களிடையே நிகழ்ந்த பிரச்சினைகளின் போது சமரசத்தில் ஈடுபட்ட அனுபவம்  அவருக்கிருக்கிறது. அதே போன்று தமிழீழ பாதுகாப்புப்  பேரவை  உறுப்பினர்களிடையே நிகழ்ந்த சிறு பிரச்சினையை எவருக்கும் பாதகமில்லாமல் முடித்ததும் குறிப்பிடத்தக்கது.      
பழுகாமத்தில் புளொட் இயக்கத்தவர்களிடையே பிரச்சினை ஏற்பட்ட போது ஏற்கெனவே தன்னிடமிருந்து பெற்ற சைனைட்டை நவரத்தினம் என்ற புளொட் உறுப்பினர் ஒருவர் அருந்தி உயிரிழந்த சம்பவம் அவருக்குப் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.

உளவு பார்த்த சிறுவன்  
இந்நிலையில்  தன் பொருட்டு இயக்க மோதல் ஒன்று பெரிதாக  வெடித்தால் எத்தனை உயிர்கள் பலியாகுமோ எனப் பயந்தார். கல்முனையில் விற்பனை அபிவிருத்தித் திணைக்களத்தில் பணியாற்றும் ஒருவரது வீட்டில் அவரையும், முரளியையும் வைத்திருந்த போது சிறியரிடம் தனது கருத்தை வலியுறுத்துமாறு அந்த வீட்டுக்காரரிடம் சொன்னார். " இயக்க மோதல் எண்டதை விட   இன்னொரு விசயமும் இருக்கு. இண்டைக்கு நான் கல்யாணம் முடிச்சு ஆறாவது நாள். இண்டைக்கு நான் செத்தா என்ரை மனிசியின்ரை ராசியாலதான் நான்  செத்துப்போனான் எண்டு தான் சனம் சொல்லும். தப்புச் செய்தது சிறியண்ணா. பழி சுமக்கிறது என்ர மனிசியோ ? உங்கட சகோதரி ஒருத்திக்கு இப்படி ஒரு பழி வந்தா எப்படி இருக்கும் எண்டு புரிஞ்சு கொள்ளுங்கோ ". என்று அவரிடம் சொன்னதும் அவர் ஒரு கணம் ஆடிப் போய் விட்டார் . அவர் டெலோவின் ஆதரவாளர் . அவரது 13 வயது மகன் தான் எந்த வழியால் புலிகள் வருகின்றார்கள் என்று உளவு பார்த்து டெலோவினருக்குச் சொல்லிக்கொண்டிருந்தார்.            
அதற்கேற்ற வகையில் பசீரையும்,முரளியையும் மாற்றிக்கொண்டிருந்தனர்  முற்றுகை இறுகி இறுகி இந்த வீட்டை  நெருங்கும் சமயமாகிவிட்டது. வெளியில் டெலோவினரின்  வாகனங்கள் தகர்க்கப்படும் சத்தங்கள் அங்கிருந்த டெலோ உறுப்பினர்களுக்குப் பீதியைக் கொடுத்ததை அவர்களின் விழிகளில் இருந்து புரிய முடிந்தது .  
 அப்போது அங்கிருந்த டெலோவினருக்கு ஒரு வகையில் தாங்கள் கவசமாக இருப்பதைப் புரிந்து கொண்டனர் பசீரும்,முரளியும்.  
இதேவேளை சண்டை கட்டைப்பிராயில் தொடங்கியவுடனே கிட்டுவும் , பிரபாகரனும் உரையாடினார். இருவரையும் விடுதலை செய்யாததால் சண்டையைத் தொடர்வதென முடிவெடுத்தனர்.
கட்டைப்பிராய் மாடிவீட்டில் சண்டை தொடங்கிய வீதம் குறித்தும் தெரிவிக்க வேண்டியுள்ளது அங்கு நின்ற திருமலையை சேர்ந்த டெலோ உறுப்பினர் ஒருவர் வாகனத்தில் ஆயுதங்களுடன் புலிகள் வந்து இறங்கியதைக் கண்டதும் கைநடுங்கி வானத்தை நோக்கிச்  சுட்டார். ஆயுதங்களோடு யார் வந்தாலும் சுடு என்று தான் அவர்களுக்குக் கட்டளை இடப்பட்டிருந்தது.ஒரு வேட்டு போதுமே சமறைத் தொடங்க - பேச்சுவார்த்தைக்கோ எச்சரிக்கை.விடவோ  தேவையில்லாமல் போயிற்று. லிங்கம் தலைமையிலான குழுவினருக்கும் இப்படித்தான் எதாவது நடந்திருக்க வேண்டும். அவரது தலையில் சுட்டுக் காயம் காணப்பட்டது.
இதே வேளை கல்வியங்காட்டுக்குள் சிக்கிய சராவின் நிலைமை சங்கடமாகியது. இவரை ஒரு கட்டிலின் கீழ் விட்டனர் இவரது உறவினர். அந்தக் கட்டிலுக்கு மேல் இரு டெலோவினர் ஆயுதங்களுடன்    வந்தமர்ந்தனர். அதிலிருந்து சாப்பிடவும் செய்தனர்."தேவையில்லாம  சண்டையைத் துடங்கிப்போட்டாங்கள்.இதுக்குள்ளால என்னெண்டு வெளியால போறது? மூண்டு ரவுன்ஸ்தான் என்னட்ட இருக்கு. உன்னிட்ட எத்தனை இருக்கு?“ என ஒருவர் மற்றவரிடம்  விசாரித்தார். எல்லாவற்றையும் கட்டிலுக்கு கீழ் படுத்திருந்து கேட்டுக்கொண்டிருந்தார் சரா.  
அவரது அப்போதைய பிரச்ச்சினை தும்மலோ , இருமலோ வந்துவிடக்கூடாது என்பது.முற்றுகையில் ஈடுபட்டவர்கள் முரளி , பசீருடன் சராவையும் தேடினர். டெலோ உறுப்பினர்கள் அங்கிருந்து போகும் வரை அந்த வீட்டுக்காரர்கள்  வேண்டாத தெய்வம் இல்லை.    அன்றைய காலகட்டத்தில் புலிகள். ஏனைய இயக்கங்களை விட தொலைத்தொடர்புக் கட்டமைப்பில் சிறந்து விளங்கினர்.    
  கிட்டு பெல் என்றழைக்கும்  சிறுவன் குரங்கு வளர்த்தால் டக்ளஸ் தான்  மேலான ஆள் என்று காட்ட தா ட்டான்  குரங்கு வளர்ப்பார். புலிகள் கொக்கோ  கோலா  குடிப்பது தெரிந்தால்  தாங்களும் கேஸ் கணக்கில் வாங்கிச் செல்வர் ஏனைய இயக்கத்தவர். புலிகள் போடும் உடுப்புப் பாணியிலேயே தங்களையும் அடையாளம் காட்டுவர். ஆனால் தொலைத்தொடர்பு போன்ற போராட்டத்துக்கு அவசியமான விடயங்களில் அக்கறை செலுத்தவில்லை.

யாழ்ப்பாணத்தில் சண்டை தொடங்கியதும் ,மட்டக்களப்பு, திருமலை போன்ற இடங்களிலும் டெலோ முகாம்கள் மீது புலிகள் தாக்குதல் நடத்தினர். அங்கிருந்த டெலோ உறுப்பினர்களுக்கு ஏன் சண்டை நடக்கின்றதென்றே தெரியவில்லை.தொடர்ந்து நடந்த நடவடிக்கைகள் பலருக்கும் அதிர்ச்சி யானைவையாக இருந்தன  
மட்டு -  பாடுவாங்கரையில் நடந்த தாக்குதலில் பின்னர் உயிரிழந்த ஒருவரது சடலத்தைப் புரட்டியபோது அவர் ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டிருந்ததை உணர முடிந்தது .புத்தகத்தின் நடுவே அவரது பெருவிரல் காணப்பட்டது. அதில் அவரது இரத்தத் துளி பட்டிருந்தது .அது கொக்குளாய் முகாம் மீதான தாக்குதல் குறித்து புங்குடுதீவைச் சேர்ந்த போராளி சுபாஷ் எழுதிய விபரணம். (இவர் இப்போது தாமோதரம்பிள்ளை.பாலகணேசன் என்ற தனது சொந்தப்பெயரில் எழுதி வருகிறார்) அந்தப் புத்தகத்தின் தலைப்பைப் பார்த்ததும் அதிர்ந்து நின்றார். அத் தாக்குதலுக்குத் தலைமை தாங்கிய பொட்டம்மான்.அந்தப் புத்தகம் "விடியலுக்கு முந்திய மரணங்கள்"  
தொடரும்

 

புரிந்துணர்வுடன் செயற்பட்ட இயக்கங்களிடையே முரண்பாடு !கூட்டமைப்பின் உருவாக்கம்-3

குளுவன்களுக்கு கயிறு எறியும் பொறுப்பு தராக்கியிடம்!கூட்டமைப்பின் உருவாக்கம் எப்படி ? (அங்கம்:2)

கூட்டமைப்பின் உருவாக்கம் எப்படி நிகழ்ந்தது ! (அங்கம்:1)

 

  

  

  ஒரு தலைக் காதல் காரணமாக இளம்பெண் தற்கொலை (படங்கள்)

Read More